
நெல்லை CSI அடிதடி: நெல்லை சிஎஸ்ஐ அலுவலகத்தை பூட்டு போட்ட நெல்லை திமுக., எம்பி., ஞான திரவியம் *மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ வெளியிட்ட பாதிரியார் காட்ப்ரே நோபுள் மீது திமுக., குண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பாதிரியார் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து திமுக., எம்.பி., உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மண்டல சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ டயோசீசின் பிஷப் ஆக பர்னபாஸ் செயல்படுகிறார். மண்டல நிர்வாகப் பணிகளை கவனிக்கும் லே செயலராக ஜெயசிங் என்பவர் உள்ளார். இவரது ஆதரவோடு பிஷப் ஆனவர்தான் பர்னபாஸ். இருப்பினும் பொறுப்புக்கு வந்த பின் இருவரும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டனர்.
திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி. ஞானதிரவியம், சி.எஸ்.ஐ.,யில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் லே செயலரின் ஆதரவாளர். மண்டல கல்வி நிலவரக் குழு செயலராகவும் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளராகவும் இருந்த எம்பி.,யை, அந்தப் பொறுப்புகளில் இருந்து நீக்கி பிஷப் பர்னபாஸ் அண்மையில் உத்தரவிட்டார்.
சி.எஸ்.ஐ. மண்டல கல்வி நிலவரக் கூட்டம் கடந்த மே மாதம் 25ம் தேதி நெல்லையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மண்டல பேராயர் பர்ணபாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருநெல்வேலி திமுக., எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காரசாரமான விவாதம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, திமுக., எம்.பி. ஞானதிரவியம் எழுந்து, மண்டல நிர்வாகிகளை கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த மண்டல நிர்வாகி ஒருவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்ப, மயிரப் புடுங்கிட்டு இருந்தேன் என்று அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகித்தார் திமுக., எம்.பி. ஞானதிரவியம். இது, மண்டல நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து, அங்கு ஞான திரவியம் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், திமுக., எம்.பி. ஞானதிரவியத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிரியார் பிஷப் காட்ஃப்ரே நோபல் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இந்தப் பிரச்னை தொடர்பாக லே செயலர் ஜெயசிங் மற்றும் எம்.பி., ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., அலுவலகம் முன் கூடினர்.
காலை 11:00 மணிக்கு, பிஷப் பர்னபாசின் ஆதரவாளரான, காட்ப்ரே நோபுள், சிலருடன் சி.எஸ்.ஐ., அலுவலகம் வந்தார். அவர் சி.எஸ்.ஐ., உறுப்பினராக இருந்தாலும், ஜே.எஸ்.எம்., என்ற தனி திருச்சபையின் பிஷப் ஆக செயல்படுகிறார். அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார்; தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.
அவர் தி.மு.க., – எம்.பி., ஞான திரவியத்தை விமர்சித்து முன்னர் வெளியிட்டிருந்த வீடியோவில் தி.மு.க., தலைமை, எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் சில குறிப்பிட்டிருந்தார். இதனால் எம்.பி., ஞானதிரவியம் ஆதரவாளர்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ஞாயிறு காலை சி.எஸ்.ஐ., அலுவலகத்திற்கு வந்த காட்ப்ரே நோபிளை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது. அவரது சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி அடித்தனர். கிழிந்த சட்டையுடன் அவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். பின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், திமுக., எம்பி., ஞான திரவியம் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் மற்றும் சொத்து நிர்வாக அதிகாரி மூன்றடைப்பு ஜான், ஆடிட்டர் மைக்கேல் உட்பட 33 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத போதகர் கார்பரே நோபில் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் திமுக., எம்பி., ஞான திரவியம் மீது 147, 294 b, 323, 109, 506( 1) என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்