
மதுரை: மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இப்போது நாட்டில் ஒரு கலாசார மறுமலர்ச்சி வந்திருக்கிறது. அதனால் மீண்டும் நாம் (பாஜக.,) ஆட்சிக்கு வரவேண்டும் என்றார். அவர் மேலும் கூறியதாவது…
மணிப்பூரில் நடைபெறும் கலவரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, அங்கே மேய்தி என்ற ஹிந்து சமுதாயத்தினர் 55 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றார்கள். அவர்களை மற்ற சமுதாயத்தினர் குறி வைத்து தாக்குகின்றார்கள். குறிப்பாக, பர்மா, அதாவது தற்போதைய மியான்மர் நாட்டில் இருந்து வந்தவர்கள் சீனாவின் ஆதரவுடன் இவ்வாறு செய்கிறார்கள். இதனால் கலவரம் பெரிதாக உள்ளது.
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். ஆனால் அவர் இம்பால், அதாவது மணிப்பூருக்கு சென்றிருக்க வேண்டும். அதில் எனக்கு வருத்தம் தான். பிரதமர் அமெரிக்கா சென்றதால் அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. அதனால் இன்னும் இம்பால் போய் பார்க்கவில்லை. அவர் மணிப்பூருக்கு சென்று நிலைமையை சரியாக்க உடனே முயற்சி செய்ய வேண்டும்… என்றார்.
வரும் 2024 தேர்தலைக் குறிவைத்து, பாட்னாவில் நடைபெற்ற எதிர்க் கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த சுப்பிரமணியம் சுவாமி, எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து வந்தால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் என்னுடனைய கருத்து என்னவென்றால், பிரதமர் மோடி என்ன நல்லது செய்தார், செய்யவில்லை என்பதெல்லாம் ஒரு பேச்சு அல்ல.. பாஜக.,வுக்காக ஓட்டு போடுபவர்கள் என்று ஒரு தரப்பினர் உள்ளார்கள். அதாவது, ஹிந்துத்வாவுக்காக, ஹிந்து மறுமலர்ச்சி கொண்டு வரவேண்டும் என்பதற்காக, கோயில்களை எல்லாம் அரசின் பிடியில் இருந்து விடுவித்துக் கொடுத்தோம் என்பதற்காக, சாதி வேறுபாடுகளை எல்லாம் கடந்து ஹிந்து ஒற்றுமைக்காக என்று இப்படியெல்லாம் இருந்தால், இதில் பாஜக.,வுக்கு ஓட்டு அதிகம் கிடைக்கும். அவற்றில் மோடி பெரிதாக எதுவும் செய்யவில்லை.
மோடி அப்படிச் செய்தார், நல்லது செய்தார் என்றெல்லாம் இங்கே சிலர் ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா, அதெல்லாம் ஓட்டாக வராது. ஹிந்துத்வாவுக்காக மோடி பெரிதாக செய்வார் என்று எதிர்பார்த்தார்கள் தொண்டர்கள். அதில் மோடி ஒன்றும் செய்யவில்லை என்பது ஏமாற்றம். ஆனால் நாம்தான் அடுத்து வரவேண்டும், நம் நாட்டில் வெள்ளைக்காரர்கள் முஸ்லிம்கள் வந்து கெடுத்து வைத்த நமது கலாசாரத்துக்கு இப்போதுதான் ஒரு மறுமலர்ச்சி வந்திருக்கிறது. அந்த ஒற்றுமைக்காக மக்கள் மத்தியில் அந்த வந்திருக்கிறது. அதற்காக வாக்குகள் கிடைக்கும். நாம் மீண்டும் வரவேண்டும் என்றார்..
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைப்பது குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, எல்லாம் நாடாளுமன்றத்தில் பேசி முடிவாகிவிட்டது. பிரபுல் படேல் என்னிடம் உறுதியாகக் கூறினார். இதை நான் அறிவிக்கப் போகிறேன் என்றும் கூட சொன்னார். மதுரை விமான நிலைய திறப்பு விழா நேரத்தில் பிரபு படேல் அறிவிக்க இருந்த நேரத்தில் அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதற்கு எஸ்டி., மக்கள் அதிருப்தி அடைவார்கள் என்று சொல்லி, அவ்வாறு அறிவிக்க விடாமல் தடுத்து விட்டார்.
முத்துராமலிங்க தேவர், தேவர் என்பது மட்டுமல்ல, அவர் நாட்டு விடுதலைக்காகப் போராடியவர். ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். எனக்கு அவரது பெயரை இங்கே விமான நிலையத்துக்கு வைக்கதது பெரிய வருத்தம்தான்.
இன்றைக்கு ஆட்சியில் இருந்தாலும் எவரும் ஆதரவு அளிக்கவில்லை. திமுக., அதிமுக., எவருமே இதற்கு ஆதரவளிக்கவில்லை. இவர்கள் கடிதம் கொடுத்தால், நாடாளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். ஆனால் ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல் படுகின்றனர். ப. சிதம்பரத்துக்கும் பொறாமை. நீங்கள் தான் அவர்களிடம் கேட்கவேண்டும், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்கவேண்டும்” என வருத்தத்துடன் கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.