சென்னை ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட வேண்டிய அரிசி கடத்தப்படுவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்கான அரிசியில் 12 விழுக்காட்டுக்கும் கூடுதலான அரிசி கடத்தப்படுவதை சாதாரண விசயமாக ஒதுக்கிவிட முடியாது. தமிழகத்தில் நடைபெறும் அரிசிக் கடத்தல் தொடர்பாக தேசிய மாதிரிக் கனக்கெடுப்பில் தெரிய வந்துள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் இந்தக் குற்றச்சாற்றை பொருளாதார ஆய்வறிக்கை முன்வைத்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில் 31.56 லட்சம் டன் அரிசி மட்டும் தான் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது என்றும், மீதமுள்ள 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.610 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரிசி அளவின் அடிப்படையில் பார்த்தால் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசியில் சுமார் 12 விழுக்காடு கடத்தப்பட்டிருக்கிறது. மதிப்பின் அடிப்படையில் பார்த்தால் அரிசி மானியத்திற்கான ரூ.3200 கோடியில் சுமார் 19% அளவுக்கு கடத்தல் நடைபெற்றிருக்கிறது. இது மிகப்பெரிய அளவிலான ஊழல் ஆகும். அரிசி கடத்தலைத் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் துல்லியமானவை அல்ல என்றும், இதனால் இதை பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது அரிசிக் கடத்தல் ஊழலை அடியோடு மூடி மறைக்கும் முயற்சி ஆகும். அரிசிக் கடத்தல் தொடர்பான தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு விவரங்கள் அரிசிக் கடத்தலின் அளவைக் குறைத்து வேண்டுமானால் காட்டியிருக்கலாமே தவிர நிச்சயமாக அதிகரித்துக் காட்டியிருக்க வாய்ப்பு இல்லை. அதற்கெல்லாம் மேலாக கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல தமிழகத்தில் நடைபெறும் நியாயவிலைக் கடை அரிசி கடத்தல் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். எனவே. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் துல்லியத் தன்மையை காரணம் காட்டி இந்த ஊழலை மூடி மறைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றில் எந்த நியாயவிலைக் கடைக்கு சென்றாலும் 20 ஆம் தேதிக்குப் பிறகு அரிசி வழங்கப்படாது. அதேபோல், சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை 10 ஆம் தேதிக்குப் பிறகு வாங்க முடியாது. காரணம் ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் எந்த அளவுக்கு அரிசி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமோ, அதில் 60% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல், பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் 50% அளவுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. அப்படியானால் மீதமுள்ள பொருட்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தான் கொள்ள வேண்டும். இந்தக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் அரிசி கடத்தல் மூலம் ரூ.1280 கோடியும், பருப்பு மற்றும் பாமாயில் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.697 கோடியும் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். இது பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விட பல மடங்கு அதிகமாகும். நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தப்படுவதன் மூலம் அரசுக்கு ஓராண்டுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1977 கோடி என்றால், 4 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.7908 கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். நியாயவிலைக் கடை பொருட்கள் கடத்தல் தொடர்பான குற்றச்சாற்றுக்கள் உண்மையில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு தான் உள்ளது. தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படவில்லை என்று தமிழக அரசு கருதுமானால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டு குற்றமற்ற தன்மையை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்று தான் மக்கள் நம்ப வேண்டியிருக்கும். என்று கூறியுள்ளார்.
ரேசன் அரிசி கடத்தலில் பல்லாயிரம் கோடி இழப்பு : சி.பி.ஐ. விசாரணை கோருகிறார் ராமதாஸ்
Popular Categories


