
தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி அரசியலில் ஈடுபடுவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பின்னர் தனது உத்தரவை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென்று 7 நாள் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லியில் உள்ள இல்லத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். தமிழக அரசுடன் உள்ள மோதல் போக்கு, செந்தில் பாலாஜி பதவி நீக்கம் பற்றிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பல்வேறு புகார்களை ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையை பகிர்ந்து கொண்டு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில்
தமிழக ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான செயல்பாடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் மாநில சட்டமன்றத்தை அவர் புறக்கணித்தல், மாநில விவகாரங்களில் அத்துமீறி நடந்துகொள்வது குறித்து மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வது, போலீஸ் விசாரணையில் தலையிடுவது, பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை ஊக்குவிப்பது போன்ற ஆளுநரின் செயல்கள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகும். மாண்புமிகு ஜனாதிபதி நமது அரசியலமைப்பின் உணர்வைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் பதவியை வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர்.
அரசியல்வாதியாக மாறும் ஒருவர் ஆளுநர் பதவியில் தொடரக் கூடாது.
இந்தியா ஒற்றை மதத்தைச் சார்ந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்து அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்
ஊழல் புரிந்து முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பான கோப்புகளைக் கிடப்பில் போட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியில் நீடிப்பது பொருத்தமானதாக உள்ளதா என்பதை ஜனாதிபதி முடிவுக்கே விட்டு விடுகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அரசியல் பேசலாமா என்பது குறித்த விவாதம் அண்மைக்காலமாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. என்னை போல் ஆளுநரும் அரசியல் பேசினால் திமுகவினர் தலைதெறிக்க ஓடி விடுவார்கள் என்று அண்ணாமலை அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். ஆளுநர் பத்திரிகையாளர்களை சந்தித்து அரசியலை பேச வேண்டும் என்று தான் யோசிக்கிறேன் அப்படி பேசினால் பலர் ஓடிவிடுவார்கள் ஆனால் அவர் பேசாமல் இருப்பது நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும். அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம்… என்று குறிப்பிட்டார்.