
திமுக அரசு அறிவித்த தகுதியுள்ள மகளிருக்கு மகளிர் உதவித் தொகை என்று அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலுக்கு முன்பு அனைத்து மகளிர்க்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு இப்போது அதில் தகுதியை நிர்ணயம் செய்திருப்பது ஏமாற்று வேலை என்று அரசியல் ரீதியாக கண்டனங்கள் எழுந்துள்ளன.
வெள்ளிக்கிழமை அன்று மகளிர் உதவித் தொகை குறித்த அறிவிப்பினைவெளியிட்டது தமிழக அரசு. மகளிருக்கு மாதம் தோறும் ஆயுிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
தகுதிகள் என்ன?
குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர்.
ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் என குறிப்பிட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவர்.
குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவர்.
திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களும் குடும்பத் தலைவியாக கருதப்படுவர்.
குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடை முகாமில் விண்ணப்பிக்கலாம்.
21 வயது நிரம்பிய பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பி்க்கலாம். 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
ஐந்து ஏக்கர் நன்செய், மற்றும் 10 ஏக்கருக்கு குறைவாக உள்ள புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆண்டுக்கு வீட்டுக்கு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு கீழ் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பங்கள்
பொருளாதார தகுதிக்காக தனியான வருமானவரிச் சான்று, நில ஆவணச் சான்றுகளை இணைக்க தேவையில்லை
யாருக்கு இது கிடைக்காது?
வருமான வரி செலுத்துவோர், தொழில் வரி செலுத்துவேர்
ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்
எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் , மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஆண்டு ஓய்வூதியம், சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க முடியாது.
சொந்தப் பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
அரசு ஊழியர்கள், பொதுதுறை நிறுவன ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியாது.
முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நலவாரியம் ஓய்வூதியம், சமூக பாதுப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் மாநில அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் விண்ணப்பிக்க முடியாது.
விதி விலக்கு : கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறும் உறுப்பினரை கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
மொபைல் மூலம் செயலியில் குடும்ப அட்டை எண் , ஆதார் எண். தொலைபேசி எண் வழங்கப்பட வேண்டும்.
போட்டோக்களை பதிவேற்றம் செய்து வயது, மாவட்டம், செய்யும் தொழில் போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
வாடகை வீடா? சொந்தவீடா? என்று தெரிவிப்பதுடன் நிலம் வைத்திருப்பவரா, வாகனம் வைத்து உள்ளவரா என்பன போன்ற தகவல்களையும் உள்ளிட வேண்டும்.
முடிவாக வங்கி கணக்கு தெரிவித்து விட்டு உறுதிமொழி வழங்கினால் பயனர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
திட்டத்தின் பயனாளர்கள் யார் யார் என்பதை மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு செய்வர்.
— இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அரசு தெரிவித்துள்ள தகுதிகள் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்த போது….
வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனை விதித்தது.
நேற்றைய தினம், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை திமுக அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்க, திமுக எதிர்பார்க்கும் தகுதிகள் என்னென்ன என்று பார்ப்போம்.
குடும்பத்தின் மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது, இவர்கள் கொடுப்பதாகக் கூறிய மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வாங்க, குடும்பத்தில் யாருமே வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் உள்ளது. தமிழக மக்கள் கடினமான உழைப்பாளிகள்.
வேலைக்குச் செல்லாமல், டீக்கடை, பஜ்ஜிக் கடை, பிரியாணி கடையில் பாக்ஸிங் செய்து திரிய, தமிழக மக்கள் அனைவரும் திமுகவினர் இல்லை என்பதை, முதலமைச்சருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
அடுத்த தகுதி, மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாதாம். ஷாக் அடிக்கும் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி வைத்திருக்கும் திறனற்ற திமுக அரசுக்கு, மின்சாரக் கட்டணம் கட்டவே எளிய மக்களின் பாதி வருமானம் போய் விடுகிறது என்பது தெரியாதா?
தமிழகத்தில் 99.6 லட்ச வீடுகள், 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று, சென்ற ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு தெரிவித்தது. இந்த 99.6 லட்ச குடும்பங்களிடமும் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாதம் 300 யூனிட்டுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது என்ற விசித்திரமான நிபந்தனையை இட்டுவிட்டு, ஒரு கோடி மகளிர் பயனடைவார்கள் என்று எப்படிக் கூறுகிறார் முதலமைச்சர்?
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக, திமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டு இருக்கலாம்.
உங்கள் நிபந்தனைகள் பெரும்பாலும் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர தமிழக மக்களுக்கு அல்ல. நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
முதலமைச்சரிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்? – என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு தற்போது பல்வேறு வரையறைகளை வகுப்பது ஏன் என அதிமுகவின் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி இல்லையாம். பெரும்பாலான குடும்பங்களில் கணவர்கள் தங்கள் மனைவியிடம் செலவுக்கு பணத்தை தருவதே இல்லை. ஒரு வீட்டில் கணவருக்கு மாத வருமானம் ரூ.21 ஆயிரத்துக்கு மேல் என்றால், அந்தக் குடும்பத்தில் பெண்கள் வேறு சிலரும் இருந்தாலும், மனைவி இத்திட்டத்தில் தகுதி பெற முடியாது. கணவர் தனது மனைவிக்கு செலவுக்கு பணம் தராதவராக இருந்தால், அப்பெண் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய திண்டாடுவார். அவருக்கு ஒரு மரியாதையான உரிமைத் தொகையாக இந்தத் தொகை இருக்கலாம். ஆனால், கணவரின் வருவாயை வைத்து, மகளிர் உரிமைத் தொகையை ஒரு பெண்மணி பெறுவதற்குத் தகுதியில்லை என்று நிராகரிப்பது தவறானது என்று பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.