
கனல் கண்ணன் கைது – கருத்து சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல் என்று இந்துமுன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில், இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
இந்து முன்னணி கலை இலக்கிய பிரிவு மாநிலத் தலைவர் திரு. கனல்கண்ணன் அவர்களை நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் . இது கடும் கண்டனத்திற்குரியதாகும் .
கனல் கண்ணன் அவர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பல ஆயிரம் நபர்களால் பதிவிடப்பட்டு வந்த ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ காட்சி எதனையும் அவர் உருவாக்கவில்லை, எடிட் செய்யவும் இல்லை . அவரது பதிவில் எந்த மதத்தையும் குறிப்பிட்டு எந்த வாசகமும் தெரிவிக்கவில்லை. அவரது செயல் எந்த விதத்திலும் சட்டப்படியான குற்றச்செயல் அல்ல.
திமுக பொறுப்பாளரின் புகாரின் பேரில் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருந்தபோதிலும் விசாரணை அழைப்பாணையை ஏற்று மருத்துவமனையில் போய் பயந்து படுத்துக்கொள்ளாமல் தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் நியாயம் தன்னிடம் உள்ளது என்ற நம்பிக்கையோடும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நல்ல எண்ணத்தோடு நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு நேற்று காலை 10:30 மணிக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணி வரை அவரிடம் ஐந்து நிமிடம் மட்டுமே விசாரணை நடத்தி விட்டு வேண்டுமென்றே பல மணி நேரம் தேவையில்லாமல் அவரை காக்க வைத்துள்ளனர். மதியம் இரண்டு மணிக்கு ஆகியும் உணவருந்தக்கூட விடாமல் அவரை தடுத்து நிறுத்தி உள்ளே அனுப்பி உள்ளனர். மயக்க நிலைக்குப் போன பிறகு 4 மணிக்கு தான் அவருக்கு உணவளித்துள்ளனர். உரிய நேரத்தில் உணவே வழங்காமல் இரவு 8 மணி வரை சித்தரவதை செய்துள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும் .
தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை, இந்து விரோத போக்கை யார் யாரெல்லாம் சுட்டிக்காட்டுகிறார்களோ அவர்களை எல்லாம் காவல்துறையை வைத்து மிரட்டி வழக்கு பதிவு செய்து கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழக அரசின் இச்செயல் கருத்துச் சுதந்திரத்தை பறித்து, ஜனநாயகத்தின் குரல்வலையை பிதுக்கும் செயலாகும் .
கனல் கண்ணன் மீது புகார் கொடுத்த ஆஸ்டின் என்பவர் மீது அதே சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இரண்டு புகார்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க திராணியற்ற காவல்துறை அரசியல் பழிவாங்கும் நோக்கோடு திரு.கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.
இத்தகைய பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் தமிழக அரசின் ஜனநாயக விரோத செயலை இந்துமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.