
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, ‘நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?’ என மூன்றாவது நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதை அடுத்து, வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை இன்று இந்த வழக்கு சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர், செந்தில் பாலாஜி குற்றம் செய்ததால் கிடைத்த பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்திருப்பதாகவோ ஆதாரம் இல்லை. குற்றம் செய்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஆதாரங்கள் முழுமையாக இல்லாதபோது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கைது செய்ய முடியாது. அதே போல், கைதான 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை, சீல்வைத்த கவரில் நீதிமன்றத்தில் தர வேண்டும் என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?’ எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த கபில் சிப, ‘இது குறித்து பின்னர் முழுமையான வாதங்கள் முன் வைக்கப்படும். போலீஸ் அதிகாரிகள் போல் அமலாக்கத்துறை அதிகாரிகள் செயல்பட முடியாது’ என்றார்.
நீதிபதி கார்த்திகேயன் கூறுகையில், ‘கைதுக்கான ஆவணங்களை அமாலக்கத்துறை வழங்கியபோது அதனை பெற செந்தில் பாலாஜி ஏன் மறுத்தார்? கைது நடவடிக்கை சட்டத்தை மீறி இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்.