
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கும் கோவைக்கும் இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
மாநிலத்துக்கு இரண்டு வந்தே பாரத் ரயில்கள் என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகிறது ரயில்வே. ஆனால் தேவை அதிகம் இருக்கும் தடங்களில் வந்தேபாரத் ரயிலை இயக்க யோசித்து வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. தமிழகத்தில் சென்னை- பெங்களூர், சென்னை-கோவை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தமிழகத்தின் முக்கிய மற்றும் பயணிகள் அதிகம் செல்லும் வழீத்தடமான மதுரை – சென்னை வழித்தடத்தில் வந்தேபாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
சமீபத்தில் நெல்லை-நாகர்கோவில் இடையேயான அகலப்பாதை பணிகளை ஆய்வு செய்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், “வந்தே பாரத் ரயில் அக்டோபர் மாதத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும். இதற்காக சந்திப்பு ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்கத் தேவையான பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இந்நிலையில் ரயில்வே துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி இந்த ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் 4 வந்தே பாரத் ரயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாம். தில்லி-சண்டிகர் (243 கி.மீ.,), சென்னை – நெல்லை (622 கிமீ.,), குவாலியர்-போபால் (432 கி.மீ.,) லக்னோ – பிரயாக்ராஜ்(201 கி.மீ) ஆகிய இடங்களுக்கு வந்தே பாரத் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ரயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்படுபவை என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாகவே இருக்கும் என்றும், இதனால் 16 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.
எனவே, சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இதில் 1 பெட்டி விஐபி., பெட்டி. இதில் இருபுறமும் தலா இரண்டு இருக்கைகள் என ஒரு வரிசையில் நான்கு இருக்கைகள் இருக்கும். மீதமுள்ள 7 பெட்டிகளில் ஒருபுறம் 3 இருக்கை, மறுபுறம் 2 இருக்கை என ஒரு வரிசையில் 5 இருக்கைகள் இருக்கும்.
இந்த ரயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும். இதில் காத்திருப்பு பட்டியல் உள்ளிட்ட வசதிகள் கிடையாது. விஐபி., பெட்டியில் பயணிக்க கட்டணம் ரூ.2,800 முதல் ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட உள்ளது. மற்ற பெட்டிகளில் பயணிக்க ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை கட்டணம் நியமிக்கப்படும் என தெரிகிறது.
இந்த ரயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30க்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.