
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் ஜூலை 26ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். பின், அமைச்சர் செந்தில் பாலாஜியை அடையாறில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மாதம் 14-ந்தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம்.
இதை அடுத்து, செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்து, அதன் பிறகு காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது. மற்ற சாதாரண பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளைப் போல் நாலைந்து நாட்களில் செந்தில் பாலாஜியை வெளியே அனுப்பாமல், தொடர்ந்து அவரை மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில் காணொலிக் காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ந்தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.