என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் தழுவிய பாதயாத்திரை தொடங்கியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி புகார்களை கொடுத்து மாளவில்லை. வெறுமனே ஒவ்வொரு புகாராக கையில் வாங்கிக் கொண்டு வந்தவர், புகார்கள் கைகொள்ளாத அளவுக்குக் குவிந்து வருவதால் இப்போது அண்ணாமலையும் ஊருக்கு ஊர் ஒரு பெட்டியை வைத்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலையின் பாதயாத்திரை ஐந்தாவது நாளை கடந்துள்ள நிலையில் மானாமதுரையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அண்ணாமலை தனது சமூக தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்….
இன்றைய #EnMannEnMakkal பயணத்தில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஒன்பதாண்டு கால நல்லாட்சியின் சாட்சியாக, பெரும் ஆரவாரத்துடன் கூடியிருந்த மக்களிடையே பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
மானாமதுரை மண், தனிச் சிறப்பு வாய்ந்த மண். இங்குள்ள மண்ணால் செய்யப்படும் பானைகள் உலகப் புகழ் பெற்றவை. இந்தப் பகுதியிலிருக்கும் கீழடியில், 2600 ஆண்டு காலப் பழமையான மண்பானை ஓடுகள் கிடைத்தது, மானாமதுரையின் தொன்மைக்குச் சான்று.
மானாமதுரை சுற்றுவட்டார தொழில் வளர்ச்சிக்காக, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் கொண்டு வரப்பட்ட சிப்காட், இன்று மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், திமுக அரசுக்கு மானாமதுரை சிப்காட் பற்றியோ, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பற்றியோ எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. டாஸ்மாக் வருமானம் மட்டும்தான் திமுகவுக்குத் தேவை.
இத்தனை ஆண்டு காலம் பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக, மத்திய அரசு ஒதுக்கும் பெரும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பிய ஊழல் திமுக அரசு, தற்போது, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை மடைமாற்ற முயற்சிக்கிறது. பட்டியல் சமூக மக்களுக்கான நிதியை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. எப்படியும் யாராவது எதிர்த்து வழக்கு தொடுப்பார்கள், அதை வைத்தே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையும் கைவிட்டு விடலாம் என்ற எண்ணத்தோடு திமுக செயல்படுகிறது.
இது வரை இல்லாத அளவில், தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கியிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆக, தமிழகமும் இம்முறை பெரும்பங்கு வகிக்கும் என்பதற்கு, பெரும் திரளெனக் கூடும் பொதுமக்களின் அன்பே சாட்சி.