
நாட்டின் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் பாஜக., தலைவர் அண்ணாமலை கன்யாகுமரி மாவட்டத்தில் தன் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார். ஆக.15 சுதந்திர தினத்தன்று கொடியேற்றி தேசிய எழுச்சியை கன்யாகுமரி மாவட்டத்தில் மீண்டும் உணர வைத்தார். நீட் தேர்வு குறித்து திமுக., செய்து வரும் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், நீட் தேர்வு இல்லாமல் எவ்வகையில் திமுக.,வினர் பணம் கொள்ளை அடித்தார்கள் என்பதை ஆற்காடு வீராசாமியின் ஒரு பேட்டியை மக்களிடம் போட்டுக் காண்பித்து பிரசாரம் செய்கிறார். மதுவிலக்கு குறித்து திமுக.,வின் பொய்யான பிம்பத்தை தோலுரிக்கிறார். மத்திய அரசின் திட்டங்கள், குறிப்பாக பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட விஸ்வகர்ம நிதியுதவித் திட்டம் ஆகியவற்றையும் எடுத்துச் சொல்லி மக்களை ஈர்க்கிறார்.
தனது கன்யாகுமரி மாவட்ட பாத யாத்திரை அனுபவங்களைக் குறித்து அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது…
இன்றைய #EnMannEnMakkal பயணம், தேசியமும் ஆன்மீகமும் நிறைந்த குமரி மாவட்டம் விளவங்கோட்டில், பெருந்திரளெனக் கூடிய மக்கள் நடுவே சிறப்புற அமைந்தது.
அய்யா வைகுண்டர் அவதரித்த மண்; வேலுதம்பி தளவாய், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், மார்ஷல் நேசமணி என சிறந்த மனிதர்கள் பிறந்த, வாழ்ந்த மண். விவேகானந்தருக்கு ஞானம் கொடுத்த மண். கர்மவீரர் காமராஜருக்கு கைகொடுத்த மண். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசியவாதிகள் நிறைந்திருப்பதால், திமுக தலைவர் கருணாநிதியை, குமரி எங்கள் தொல்லை என்று புலம்ப வைத்த மண்.
நெய்யாறு தூர்வாரப்படாமல் 19 ஆண்டுகளாக, கால்வாயில் நீர்வரத்து இல்லாமல், இந்தப் பகுதியில் 39,000 ஏக்கர் நிலம், பாசன வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்துக்கு வர வேண்டிய நீரை எல்லாம், கேரள அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் விட்டுக் கொடுத்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது திமுக. நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். திமுகவோ, டாஸ்மாக்கில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறது. இவர்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சி, 1978 ஆம் ஆண்டு, வெள்ளிகோடு பகுதியில், இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதால் ,ஒன்பது உயிர்களை பேருந்தில் வைத்து எரித்துக் கொன்றது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில், குமரி கிராம்பும், மார்த்தாண்டம் தேனும், மட்டி வாழைப் பழமும் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. மத்திய அமைச்சராக இருந்து அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஏராளமான நலத்திட்டங்களைக் குமரிக்குக் கொண்டு வந்தார். ஆனால் இப்போது காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், தொகுதிக்கு வருவதே இல்லை.
மோடியின் முகவரி : விளவங்கோடு
விவசாய உற்பத்தியாளர்கள் திட்டம் மூலம் பயன்பெற்ற திருமதி பிந்து, தோட்டக்கலை மானியம் பெற்ற திரு கமலாசனன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் வீடு பெற்ற திருமதி அனிதா, செல்வமகள் திட்டம் மூலம் பலனடைந்த திருமதி ராதிகா திரு சசிகுமார் தம்பதியினர், தூய்மை இந்தியா திட்டம் மூலம் கழிப்பறை வசதி பெற்ற திரு ரமேஷ் இவர்கள்தான் மோடியின் முகவரி.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். குமரி மண் என்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பக்கம்தான் என்பதை நிரூபிப்போம்.
இன்றைய மாலை #EnMannEnMakkal பயணம், பாண்டிய மன்னர்களின் அரசவைப் புலவராகவும், அகத்திய மாமுனிவரின் முதன்மைச் சீடராகவும் விளங்கிய அதங்கோட்டாசான் பிறந்த புண்ணிய பூமியான குமரி மாவட்டத்தில், கிள்ளியூர் பகுதியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் சூழ சிறப்பாக நடந்தேறியது.
கர்மவீரர் காமராஜரும், மக்கள் பணிக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த ஐயா பொன்னப்ப நாடாரும் அரசியல் செய்த மண் இன்று, மக்கள் பணி என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களால் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
செண்பகவல்லி அணை, முல்லைப் பெரியாறு அணை, நெய்யாறு அணை என்று தமிழக உரிமை அனைத்தையும் அடகு வைத்துள்ளது திமுக அரசு. காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், இன்று நீர்வரத்து இல்லாமல் இருக்கிறது. சட்டசபையில் திமுகவிடம் இதை பற்றி கேள்வி எழுப்பினால், தண்ணீர் வராத கால்வாயை சுத்தம் செய்தால் என்ன என்று பேசியுள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். டாஸ்மாக் போதும் என்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 1971 ஆம் ஆண்டு, மதுவிலக்குக்காகப் போராடிய 33,000 பேரைக் கைது செய்த கருணாநிதியின் மகன் தானே. வேறு எப்படி இருப்பார்?
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியில், குமரி கிராம்பும், மார்த்தாண்டம் தேனும், மட்டி வாழைப் பழமும் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைபொருட்கள் உலகத்தில் அனைத்து இடத்திற்கும் செல்லவேண்டும் என்பதே நமது பாரத பிரதமரின் ஆசை.
மோடியின் முகவரி : கிள்ளியூர்
மத்திய அரசின் Startup India திட்டத்தின் மூலம் தொழில் முனைவோரான திருமதி சுசீலா, பிரதமரின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் பலனடைந்த திரு. பால்மணி, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திருமதி. சாந்தினி, இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நேரு யுவ கேந்திரா சங்கதன் திட்டத்தின் மூலம் பலனடைந்த திரு ராஜேஷ், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் பலனடைந்த திரு. மணிகண்டன். இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முகவரி.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லாத மனிதர் இந்த மலை முழுங்கி மனோ தங்கராஜ் .மத்திய அரசு தமிழகத்தின் மீனவர்களின் நலனுக்காக வழங்கும் நிதி எங்கே செல்கிறது? கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் 600 லாரியில் குமரி மாவட்டத்தின் வளங்கள் சூறையாடப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகளுக்கு போதிய கல் அனுப்பாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த துறைமுகத்தின் முகத்துவாரத்தில் கடல் அலையால் ஏற்படும் மணல் திட்டுகளில் சிக்கி இதுவரை 50 க்கும் மேற்பட்ட படகுகள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை உயிர் போகும் வரை இந்த ஊழல் திமுக அரசு காத்திருக்கும். மீனவர்களில் நலனில் துளி கூட இல்லாத அரசு இந்த ஊழல் திமுக அரசு.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க, குமரி மண்ணும் நிச்சயம் துணை நிற்கும்.
இன்றைய #EnMannEnMakkal பயணம், தேசியச் சிந்தனை மிக்க குமரி மண்ணின் பத்மநாபபுரத்தில், பெரும் மக்கள் திரள் சூழ சிறப்புற நடந்தேறியது.
குமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடி, சிறை சென்று, பின்னர் இதே தொகுதியில் 1962 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயா குஞ்சன் நாடார், 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்புறப் பணியாற்றிய ஐயா பாலச்சந்திரன் ஆகியோரை தேர்ந்தெடுத்த தொகுதி இன்று, கனிம வளங்களைக் கொள்ளையடிக்கத் துணை போகும் மலைமுழுங்கி மனோ தங்கராஜால் தன் சிறப்பை இழந்து நிற்கிறது.
மீனவ மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குமரியில் ரப்பர் பூங்கா அமைப்போம், தொழில் நுட்பப் பூங்கா அமைப்போம், வாழைப்பழம், நெல், கரும்பு என குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வருவோம் என்று தேர்தல் வாக்குறுதியளித்த திமுக, குமரி மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
குமரி கிராம்புக்கும், மார்த்தாண்டம் தேனுக்கும், மட்டிப் பழத்துக்கும் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அரசு. மனோதங்கராஜ் உறவினரோ 24 மணி நேர பார் நடத்திக் கொண்டிருக்கிறார்.
மோடியின் முகவரி : பத்மநாபபுரம்
விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு திட்டத்தில் பலனடைந்த நாஞ்சில் நாடு உற்பத்தி நிறுவனம் திரு செல்லத்துரை, விவசாயத்திற்கான நுண்ணீர் பாசனத் திட்டம் மூலம் பலனடைந்த திரு உண்ணிகிருஷ்ணன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பலனடைந்த திரு.கணேசன், தேசிய தோட்டக்கலை மானியத் திட்டத்தில் பலனடைந்த காய்கறி வியாபாரம் செய்யும் திரு நாராயணப் பெருமாள் மற்றும் திரு. திரவியம். இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் ஏமாற்றுக் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம்.
இன்றைய #EnMannEnMakkal பயணம், மண்டைக்காடு அம்மன் அருள்பாலிக்கும் குமரி மண்ணின் குளச்சலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மீது பேரன்பு கொண்ட பொதுமக்களால் சிறப்புற்றது.
குளச்சல் மக்கள் போராட்ட உணர்வு, 1741 ஆம் ஆண்டு டச்சுப் படைகளுக்கு எதிரான போரிலேயே வரலாற்றில் இடம்பெற்றது. 1936 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் மண்டைக்காடு கோவில் மாசிக் கொடையை, மக்களை மத ரீதியாகப் பிரிப்பதற்காக, இந்த ஆண்டு தடை செய்ய முயற்சித்த திமுக அரசு, அதே குளச்சல் மக்கள் போராட்ட உணர்வுக்குப் பணிந்திருக்கிறது.
கர்மவீரர் காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர், உள்துறை அமைச்சராக இருந்த திருமதி லூர்தம்மாள் சைமன், குளச்சலைச் சேர்ந்தவர்.
அப்படிப்பட்ட குளச்சல் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், அவரது மகன்கள் எல்லாம் அடாவடி செய்கிறார்களே தவிர மக்களுக்கான பணிகள் எதையும் செய்வதில்லை.
குமரியின் விவசாயப் பொருள்களுக்கு புவிசார் குறியீடு கொடுத்தது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அரசு.
மோடியின் முகவரி : குளச்சல்
மத்திய அரசின் விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு நிதி மூலம் பலனடைந்த கப்பியரை கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் திரு ஜான்சன், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் தொழில் முனைவராகியிருக்கும் திரு அன்பழகன், நமது பாரதப் பிரதமரின்
One Rank One Pension என்ற முன்னெடுப்பினால் பலனடைந்த திரு கோபி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் மருத்துவக் காப்பீடு பெற்று பயனடைந்த திரு ராமையன், செல்வமகள் திட்டத்தின் மூலம் பலனடைந்த திருமதி வித்யா. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
குமரி மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு, படித்த இளைஞர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளான ரப்பர் பூங்கா ,தொழில் நுட்பப் பூங்கா என திமுக ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறார்களா? திமுகவினர் நடத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள் சம்பாதிக்க மத்திய அரசின் கல்வித் திட்டங்களை எதிர்க்கிறார்கள். குமரியின் கனிம வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கிறார்கள். இதற்கு அமைச்சர் மலைமுழுங்கி மனோ தங்கராஜ் முக்கியக் காரணம். உரிமம் இல்லாமல் குவாரிகள் இயங்குவது அமைச்சருக்குத் தெரியாதா.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக, பெருந்தலைவர் காமராஜர் காலத்திலிருந்தே தேசியத்தின் பக்கம் நிற்கும் குமரி மண் முழு ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தலைமுறை தலைமுறைகளாக மாற்றங்களை எதிர்நோக்கி, வெறும் ஏமாற்றங்களை மட்டும் சந்தித்து வந்த மக்கள், கடந்த 9 ஆண்டுகளாக, பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் மேற்கொண்ட அரும்பணிகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கண்களை மூடிக் கொண்டு கண்ட சின்னங்களில் குத்தாமல், கட்சியின் வேட்பாளரின் எண்ணங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். மது என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த, தமிழகத்தின் ஒரு நல்ல தலைமுறையை கொடிய மதுவிற்கு அடிமையாக்கி, மதுவலையில் வீழ்த்தி, தமிழகத்தைச் சிதைத்த மாபெரும் பாவம் தி.மு.க.,வையும், கருணாநிதியின் குடும்பத்தையும் சாரும்.
கடந்த 2016ல் சட்டசபை தேர்தலின்போது, ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில், மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்ற, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை, ஸ்டாலினால் செய்தியாளர்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது.
கடந்த 1948ல் இருந்து 23 ஆண்டுகளாக, தமிழகத்தில் அமலில் இருந்த முழு மதுவிலக்கை, 1971ல் ரத்து செய்த கருணாநிதியின் அறிக்கையை படிக்கும்போது, அதன் ஒவ்வொரு வரியும் பாவ மன்னிப்பு கோருபவரின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவே, மக்கள் நம்பினர்; ஆனால், ஏமாந்தனர்.
கடந்த 2010 ஆக., 24ல், செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதியிடம், மதுவிலக்கு பற்றி கேட்டபோது, ‘மதுவிலக்கு குறித்து பரிசீலித்து வருவதாகத் தானே சொன்னேன்; இத்தனை நாட்களில் கொண்டு வருகிறேன் என்றா கூறினேன்?’ என, எதிர்கேள்வி கேட்டு நழுவினார்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது, 12 ஆயிரம் புதிய பள்ளிகளை திறந்து, அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் மதுக் கடைகளை திறந்து, மக்களை குடிக்க வைத்தது யார்?
பள்ளி மாணவர்கள், மாணவியர் கூட, மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?
கடந்த 1971ல் ராஜாஜி, கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, ‘மதுக் கடைகளை திறக்க வேண்டாம்’ என்று மன்றாடியபோதும், அதை பொருட்படுத்தாமல், மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?
‘மது கூடவே கூடாது’ என்று ஈ.வெ.ரா., சொன்னார். ‘மது வாயிலாக கிடைக்கும் வருவாய் என்பது, புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெய் போன்றது’ என்று அண்ணாதுரை கூறினார். ஆனால், சாராய வருமானம் தான் முக்கியம் என, மதுக் கடைகளை திறந்தவர் யார்?
‘புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை’ என, 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி, தி.மு.க.,வைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் திரைப்படம் எடுக்க உதவியவர், வேண்டியவர் என்று, ஐந்து பேருக்கு, புதிய மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது யார்?
படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என, 2008, டிச., 22ல் அறிவித்தது யார்; அதன்பின், 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாதது யார்?
கடந்த 1996ல் பிரசாரத்தின்போது, ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு செயல்படுத்தப்படும்’ என்று வாக்குறுதி அளித்து, அதன் பின்னர், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், அதை நிறைவேற்றாதது யார்?
‘மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று, 2008 டிச., 27ல் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது யார்?
கடந்த 2016 தேர்தல் அறிக்கையில், ‘மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும்’ என்றும், ‘மது விற்பனை வாயிலாக வரும் வருவாயை ஈடுகட்ட, புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்’ என்றும் கூறி, அதை செய்யாமல் மழுப்புவது யார்?
கடந்த 2021ல் தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ‘படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டது யார்?
இத்தனை கேள்விகளுக்கும் ஒற்றை பதில், தி.மு.க., கருணாநிதி, -ஸ்டாலின். இவர்களிடம் 50 ஆண்டுகளாக ஏமாந்த மக்கள், இனியும் நம்பி ஏமாற மாட்டார்கள்.
இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில், மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தி இருக்கிறது. வரும் ஆண்டில், ‘டாஸ்மாக்’ வருவாய், 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டக்கூடும்.
இளைஞர்கள் போதையில் மூழ்க, மக்கள் அனைவரும் கடனில் மூழ்க, மின்சாரம் இன்றி தமிழகம் இருளில் மூழ்க… இது தான் விடியல் மக்களே.