
- காப்பாற்றப்படும் ஊழல் அதிகாரிகள்
- தொடரும் வெண்ணெய் கொள்முதலில் முறைகேடுகள்
- பொய்த்துப் போன ஆவினில் விடியல் பிறக்கும் என்கிற நம்பிக்கை.
- – பால் முகவர்கள் சங்கம் கவலை.
தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசர் அவர்கள் கடந்த மே மாதம் மாற்றப்பட்டு புதிய பால்வளத்துறை அமைச்சராக திரு. மனோ தங்கராஜ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட போது, திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் சீரழிந்து போயிருந்த பால்வளத்துறையிலும், ஆவினிலும் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும், முறைகேடுகள் தடுக்கப்பட்டு, ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள், ஆவின் நிறுவனம் வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடும் என மிகுந்த நம்பிக்கை கொண்டோம்.
அது போலவே மே-11ம் தேதி திரு. மனோ தங்கராஜ் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றைய தினம் இரவு 7.30மணியளவில் அரசு இல்லத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து, பால்வளத்துறையிலும், ஆவினிலும் நடைபெற்று கொண்டிருக்கும் முறைகேடுகள் குறித்து எடுத்துரைத்து, சீரழிந்து, சிதிலமடைந்து, நலிவடைந்து கொண்டிருக்கும் ஆவினை உடனடியாக மீட்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன் வைத்த போது “அதற்கான தரவுகளை நாளைக்கே கொடுங்கள், தவறு செய்தவர்கள் இனிமேல் ஒருவரும் தப்பிக்க முடியாது, தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுப்பேன், இனி ஆவினில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை நீங்களே பார்ப்பீர்கள்” என அவர் அளித்த வாக்குறுதி எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்தது.
அதனடிப்படையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆவினில் இருந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடரை கையிருப்பே இல்லாத வகையில் திட்டமிட்டு குறைந்த விலைக்கு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்து விட்டு, ஆவினிற்கான பால் கொள்முதலை அதிகரிக்காமல் மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தரம் குறைந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடரை அதிக விலை கொடுத்து வாங்கி அதன் மூலம் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும், ஆவினில் உள்ள ஊழல் அதிகாரிகள் சுமார் 16பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலையும், ஆவினையே சுரண்டிக் கொண்டிருக்கும் மொத்த விநியோகஸ்தர்கள் (WSD) குறித்தும் அடுத்தடுத்து நாட்களில் அமைச்சரை நேரில் சந்தித்து அதற்கான தரவுகளை, ஆவணங்களை ஒப்படைத்தோம்.
ஆனால் பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதற்கான தரவுகளுடன் கூடிய பட்டியலை அளித்து இரண்டு மாதங்கள் கடந்து போன நிலையில் ஊழல் அதிகாரிகள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதோடு, 16பேர் கொண்ட முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த ஊழல் அதிகாரிகள் ராஜமரியாதையோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதையும், பால் கொள்முதலை அதிகரிக்காமல் தற்போதைய மார்க்கெட் விலையை விட மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அதிக விலை கொடுத்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் இதுவரை சுமார் 10ஆயிரம் டன் கொள்முதல் செய்து அதன் மூலம் தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதிலும் அதிகாரிகள் மும்முரமாக இருப்பதையும் பால்வளத்துறை அமைச்சரான திரு. மனோ தங்கராஜ் அவர்கள் கண்டும் காணாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
குறிப்பாக ஆவடி சா.மு.நாசர் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அவரது அலுவலகத்துக்கு துறை ரீதியான குறிப்புகளை பெற்று உதவிட என்று கூறி ஓ.டி முறையில் அனுப்பப்பட்ட கூட்டுறவு சார் பதிவாளர், தான் அமைச்சரின் நேர்முக உதவியாளர் என்று கூறிக்கொண்டு, பால் கொள்முதல் நிலையங்களில் தொடங்கி பல்வேறு நிலைகளிலும் அமைச்சரின் பெயரால் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து வசூல் மன்னனாக திகழ்ந்தவரும், நாங்கள் தற்போதைய பால்வளத்துறை அமைச்சரான திரு. மனோ தங்கராஜ் அவர்களிடம் அளித்த 16 பேர் கொண்ட முதற்கட்ட முறைகேடு அதிகாரிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த கூட்டுறவு சார் பதிவாளரான திரு. சந்தீப் என்பவரை கடந்த மே மாதம் 14ம் தேதி வாக்கில் சென்னையில் இருந்து மதுரைக்கு அப்போதைய நிர்வாக இயக்குனரான திரு டாக்டர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் நிர்வாக காரணங்களுக்காக எனக் கூறி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டும் அது தொடர்பான ஆணையை வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த நிலையில் அவர் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் மதுரையில் பணியில் சேராமல் காலம் கடத்தி வந்த சந்தீப் குறித்து நாங்கள் அமைச்சரிடம் அளித்த புகார் மீதோ அல்லது பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் அங்கே பணியில் சேராமல் இருந்ததற்காகவோ திரு. சந்தீப் அவர்கள் மீது எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அவரை கடந்த 27.07.2023அன்று மதுரையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு விருப்ப மாறுதல் அடிப்படையில் துணைப் பதிவாளராக (பால்வளம்) பணியிட மாற்றம் செய்து கூடுதல் பால் ஆணையரான திரு. ராஜராஜன் அவர்கள் உத்தரவிட்டிருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.
ஏனெனில் சென்னையில் இருந்து மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய இடத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பணியில் சேராத திரு. சந்தீப் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும், அதுமட்டுமின்றி பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஓராண்டு கழிந்த பிறகே விருப்ப மாறுதலில் பணியிட மாற்றம் செய்யப்பட முடியும் என்கிற நிலையில் இதை கவனத்தில் கொள்ளாமலும், கடந்த மே மாதம் சந்தீப் அவர்களை பணியிட மாற்றம் செய்து டாக்டர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் பிறப்பித்த பணி மாறுதல் உத்தரவு விவரங்கள், தற்போதைய பணி மாறுதல் குறித்த உத்தரவு கடிதத்தில் பார்வையில் காட்டப்படாமல் அதை மறைத்து விருப்ப மாறுதல் கோரிய சந்தீப் அவர்களின் மனு உடனடியாக அனுப்பப்பட்டு குறுகிய காலத்தில் பணி மாறுதல் ஆணை வழங்கி துணைப்பால் ஆணையர் ராஜராஜன் அவர்களால் உத்தரவிடப்படுகிறது என்றால் அதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மேலும் நாங்கள் கடந்த ஜூன் 11ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களிடம் அளித்த 16 பேர் கொண்ட முதற்கட்ட ஊழல் அதிகாரிகள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருந்த, அம்பத்தூர் ஆவின் பால் பொருட்கள் பண்ணையில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது, கடந்த அதிமுக ஆட்சியில் 236 பணியாளர்களை முறைகேடாக நியமனம் செய்ததில் (திருப்பூர்) தொடர்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் தொடர்புடைய திரு. ராஜசேகர் என்பவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரது விருப்பத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஒன்றியத்திற்கு பொது மேலாளராக பணியிட மாற்றம் செய்திருப்பது அதிர்ச்சியின் உச்சமாக இருக்கிறது. அதிலும் உதவி பொது மேலாளர் நிலையில் உள்ளவர்களை பொது மேலாளர் பணிகளில் இருந்து விடுவிக்கும் கொள்கை முடிவெடுத்து எட்டு மாவட்ட ஒன்றியங்களில் இருந்தவர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் திரு ராஜசேகர் மீது நடவடிக்கை எடுக்காமல், பெரும் பொறுப்பு வழங்கியுள்ளது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் கடந்த ஜூன் 22ம் தேதி அமைச்சரை நேரில் சந்தித்து ஆவினை சுரண்டிக் கொண்டிருக்கும் மொத்த விநியோகஸ்தர்கள் குறித்த பட்டியலை அளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர்கள் மீதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க மொத்த விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாகர்கோவிலுக்கு நேரில் சென்று அமைச்சரின் மகனை நேரில் சந்தித்து தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது, புதிய மொத்த விநியோகஸ்தர்கள் நியமனம் செய்யக்கூடாது, ஆவின் பால் விநியோகத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யக் கூடாது என கூறி மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கப்பம் கட்டுவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும், அதற்கு அமைச்சர் தரப்பில் இருந்து பச்சைக் கொடி காட்டப்பட்டதாகவும் தெரிய வரும் செய்திகள் அதிர்ச்சிக்கெல்லாம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற பால்வளத்துறை அமைச்சர் மாற்றம் எவ்வளவு நம்பிக்கையை கொடுத்ததோ தற்போது அதை விட அதிகளவில் அவநம்பிக்கையும், ஏமாற்றமுமே கிடைத்திருப்பது வேதனைக்குரிய விசயமாகும்.
தங்களின் கடுமையான உழைப்பை கொடுத்து நாள்தோறும் பால் உற்பத்தி செய்யும் ஏழை, எளிய விவசாய பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையான பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்க கோருதல் நிறைவேற்றாதது மற்றும் ஆவின் பாலை வாங்கிப் பருகும் நுகர்வோருக்கு வெளிமாநில வெண்ணெய், பவுடர் கலக்காத தரமான பாலை வழங்கிட முயற்சிக்காதது, அதே போன்று நுகர்வோருக்கு ஆவின் பாலினை கொண்டு போய் சேர்க்கும் பணியினை இரவு பகல் பார்க்காது கடும் வெயில், குளிர் மற்றும் மழைக் காலங்களில் கண்துஞ்சாது பாடுபடும் பால் முகவர்களுக்கு உரிய கமிசன் தொகை உயர்த்தி வழங்காதது, மொத்த விநியோகஸ்தர்கள் (WSD) எனப்படும் இடைத்தரகர்கள் மூலம் ஆவினில் வரும் தொகை விரயமாக்கப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி எப்போது..? என்கிற கேள்விகளே அடிமனதில் அழுத்தமாக எழுவதோடு, ஆவினிற்கு விடியல் பிறக்கும் என்கிற நம்பிக்கையை முற்றிலுமாக இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பால்வளத்துறை மற்றும் ஆவின் விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
மேலும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் நீண்ட காலமாக தொடர்ந்து கோரி வருவது போன்று மதுரையில் பொது மேலாளராக இருந்த டாக்டர் பாலசுப்ரமணியன் அவர்கள் அறிமுகப்படுத்திய நேரடி பால் முகவர்கள் விற்பனை முறை, கேஷ் அண்ட் கேரி சிஸ்டம் கண்டு பக்கத்து மாநிலங்கள் நடைமுறைப்படுத்திய நிலையில் மொத்த விநியோகஸ்தர்கள் என்கிற இடைத்தரகர்கள் முறை ரத்து செய்ய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி பால் முகவர்களுக்கு நேரடி வர்த்தக தொடர்புகளைப் நடைமுறைப்படுத்திட மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
*பின் குறிப்பு :-* 11.06.2023 அன்று பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களிடம் நேரில் வழங்கிய ஊழல் ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகளின் முதற்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை பொதுவெளியில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
— சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.