கடந்த வாரம், தமிழகத்தில் அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரையைத் தொடங்கி வைக்க தமிழகம் வந்தார் அமித்ஷா. அப்போது அவர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கும் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு அங்கே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளும் தரப்புக்கு மிக நெருக்கமான இணை ஆணையரும், செயல் அலுவலருமான மாரியப்பன் நிர்வாகத்தில் இருக்கும் கோயிலில் மாலை மரியாதையுடன் அமித் ஷா, அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது, ஆளும் தரப்பை கோபப் படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராமகுமார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், இணை ஆணையரும், செயல் அலுவலருமான செ.மாரியப்பன் நிர்வாக நலன் கருதியும், துறையின் நிர்வாக நலன் கருதியும், திருவரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ராமேஸ்வரம் திருக்கோயிலில் ஆகம விதிகளை மீறி மாரியப்பன் செயல்பட்டதாகவும் பக்தர்களை மதிக்காமல் செயல்பட்டதாகவும், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், கடந்த ஐந்து மாதங்களாக போராட்டமும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று அவர் ராமேஸ்வரத்தில் இருந்து ஸ்ரீரங்கத்துக்கு பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
குறிப்பாக, அரசியல் கட்சியினர், இந்து இயக்கங்கள் தொடர்ந்து ஏழு மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த போதும் பணியிட மாற்றம் செய்யப் படாத நிலையில் கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் அண்ணாமலைக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டவுடன், இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம், கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி தான் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையராக சிவராமகுமார் பொறுப்பேற்றார். அவர் தற்போது ராமேஸ்வரத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் இணை ஆணையருக்கு ஆளுங்கட்சி பிரமுகரால் பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கப்பட்டதாகவும், அவர் குறித்து துறை அமைச்சரிடம் நேரடியாகவே பணியிட மாற்றம் கேட்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே இவ்வளவு விரைவாக அவர் ராமேஸ்வரம் கோயிலுக்கு பணி மாற்றப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் இன்று விவாதங்கள் எழுந்தன. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சேது அரவிந்த் என்பவர் தெரிவித்த கருத்து…
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் செயல் அலுவலர்/இணை ஆணையராக சமீபத்தில் பணிஉயர்வு பெற்று வந்த திரு. சிவராம்குமார் ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத ஸ்வாமி திருக்கோவிலுக்கு மாற்றம்….
ராமேஸ்வரத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு ஏற்கனவே திருவானைக்கோவிலில் அர்ச்சகர்கள், பர்ஜாரகர்கள், பணியாளர்களை பாறாங்கல் தூக்க வைத்த, ராமேஸ்வரம் பக்தர்கள் போராடிய பெருமைகளை கொண்ட பொதுவுடமை வாதி திரு.மாரியப்பன் வருகிறார்..
(திருக்கோவிலை நாசமாக்கிடும் நால்வர் கூட்டணி வலையில் விழுந்தால் நல்ல வரும்பிடியுடன், அல்வா ஜெயராமன் போல கேள்வி கேட்பாரற்று எட்டு,பத்து ஆண்டுகள் இருக்கலாம். மனசாட்சிப்படி சுயமாக சிந்தித்து நால்வர் கூட்டணி பக்கம் சாயாமல் இருந்தால் இரண்டு மாதங்களில் மாறுதல் பெற்று செல்லலாம். #திராவிட_மாடல்