
மதுரயில், கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளையைக் கண்டு, தெறித்து ஓடிய தொண்டர்களையும், காளையையும் பாசத்தால் கட்டுப்படுத்திய அண்ணாமலை குறித்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது..
மதுரை மாவட்டத்தில் பாதயாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் வரவேற்பிற்காக கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை ஒன்று, அண்ணாமலை வந்து வஸ்திரம் சாற்றி பொட்டு வைத்த போது, கூட்டத்தைக் கண்டு மிரண்டு, திடீரென துள்ளிக் குதித்தது. அதனால் உடன் இருந்த கூட்டத்தினர் சற்று பின்வாங்கிச் சென்றனர். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை உடனே அதன் அருகில் வந்து, முகத்தில் தடவிக் கொடுத்து, அதனை அமைதிப்படுத்தினார். அதன் பின் மாடு தலையாட்டியபடி அமைதியாக நின்றது. இந்தக் காட்சி சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
‘என் மண், என் மக்கள்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் தழுவிய அளவில் பாதயாத்திரை மேற்கொணடு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டத்தில் பாதையாத்திரை மேற்கொண்டார். இதில், மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகே பாதயாத்திரை தொடங்கியுயது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரை தொடங்கும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளைக் கட்டி வரவேற்பு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தான் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றது.
அண்ணாமலை ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் வீட்டிலே ஆடுகள் வளர்ப்பினைக் கொண்டவர் என்பதும் தெரிந்த விஷயம்தான். அங்கே ஆடுகளுடன் அன்பாகப் பழகியவர், இன்று சீறும் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையையும் அச்சமின்றி அருகே சென்று அன்பாகத் தடவிக் கொடுத்து அமைதிப் படுத்தியதைக் கண்ட கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரை சந்தைப்பேட்டை பெரிய கடை வீதி, நகைக்கடை பஜார், சிவன் கோவில், செக்கடி, அழகர் கோவில் ரோடு வழியாக மேலூர் பஸ் நிலையத்தை அடைந்தது.
வழிநெடுகிலும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக.,வினர் மட்டுமல்லாது, பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வத்துடன் மலர்களைத் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்று மகிழ்ந்தனர்.