
என் மண் என் மக்கள் – நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக அண்ணாமலை நேற்று விருதுநகர் மாவட்டத்தில் பயணித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அவருக்கு பெரும் வரவேற்பு கொடுக்கப் பட்டது. இது குறித்து தனது சமூகத் தளப் பக்கத்தில் அண்ணாமலை பகிர்ந்திருப்பதாவது…
இன்றைய #EnMannEnMakkal பயணம், தென்காசியில் ஆலயம் கட்ட விரும்பிய பாண்டிய மாமன்னன் ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன், காசியில் பூஜிக்கப்பட்ட சிவலிங்கத்தைக் கொண்டு வரும்போது, இறைவனின் விருப்பத்தை உணர்ந்து உருவாக்கிய காசிவிஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள புண்ணிய பூமியான சிவகாசியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் ஆதரவோடு, விமரிசையாக நடைபெற்றதில் மகிழ்ச்சி.
தானாக உயர்ந்து வந்த சுயம்பு லிங்கம் போன்றதுதான் சிவகாசி நகரமும். 1923 ஆம் ஆண்டு, அய்ய நாடார், சண்முக நாடார் சகோதரர்கள், கொல்கத்தாவுக்குச் சென்று தீக்குச்சி செய்யும் தொழிலைக் கற்று, சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலையும் அதன் பின்னர் பட்டாசு தொழிற்சாலையும் அமைத்தார்கள். சரியாக நூறு ஆண்டுகள் ஆகின்றன. சிறிய கிராமமாக இருந்த சிவகாசி, இன்று பட்டாசு தலை நகரமாக அறியப்படுவதன் முக்கியக் காரணம், அய்ய நாடார் சகோதரர்கள் தொடங்கிய இன்றைய அய்யன் பயர்வொர்க்ஸ் என்று அழைக்கப்படும் அன்றைய நேஷனல் பயர்வொர்க்ஸ் நிறுவனம்.
தீப்பெட்டி தொழிற்சாலைகளின் கோரிக்கையை ஏற்று நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் சிகரெட் லைட்டர் இறக்குமதியை முற்றிலுமாகத் தடைசெய்துள்ளார். ஆனால், 2021 பிப்ரவரி மாதம், பட்டாசு ஆலை விபத்தைத் தவிர்க்க பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பேசினார் அமைச்சர் துரைமுருகன். 8 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பது எப்படி தீர்வாகும்? பட்டாசு ஆலை விபத்துக்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. தடை செய்வதல்ல.
மோடியின் முகவரி : சிவகாசி
தமிழகத்தில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் மற்றும் விருதுநகரில் 1.5 லட்சம் பேர் பலனடைந்துள்ள ஜல்ஜீவன் திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான கட்டளப்பட்டி திருமதி ராஜலக்ஷ்மி, தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 26,659 கோடி ரூபாய் MSME கடனுதவியில், பயனடைந்தவர்களில் ஒருவரான திரு செல்வகுமார், விருதுநகர் மாவட்டத்தில் வழங்கப்பட்ட 3272 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி மூலம் தொழில் முனைவோர் திரு பாதமுத்து, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் standup இந்தியா திட்டம் மூலம் பலன்பெற்று, இன்று 15 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கும் திருமதி சீமா, விருதுநகர் மாவட்டத்தில் இலவச சமையல் எரிவாயு உஜ்வாலா திட்டத்தின் மூலம் பலனடைந்த 59,620 பேர்களில் ஒருவரான திருமதி பொன் லக்ஷ்மி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் முகவரி.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு விருதுநகருக்கு அதிக நலப்பணிகள் செய்துள்ளது நமது பிரதமர் மோடி அவர்கள் மட்டுமே. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை,மத்திய அரசின் நிதித் திட்டங்களால் பூரண பயனடைந்த மாவட்டங்களில், விருதுநகர் முதலிடம் பிடித்துள்ளது. 1052 ஏக்கரில் விருதுநகரில் பிரமாண்டமாய் அமையவிருக்கிறது மத்திய அரசின் ஜவுளி பூங்கா. நமது விருதுநகர் மாவட்டத்தில் 54 கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவர் பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தால் பயன்பெறுகின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அடல் பென்ஷன் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை கொல்லம் ரயில், சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கு சமீபத்தில் உத்தரவை வெளியிட்டார் நமது மத்திய ரயில்வே துறை அமைச்சர்.
விருதுநகர் அரசு சட்டக் கல்லூரி, தெற்காறு குண்டாறு நீர்ப்பாசனத் திட்டம், சிவகாசி பட்டாசுத் தொழிற்பூங்கா என, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை இந்த ஊழல் திமுக அரசு. முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டிய பொருந்தாக் கூட்டணி திமுக காங்கிரஸ் கூட்டணி. வரும் பாராளுமன்றத் தேர்தலில், மத்திய அரசின் நலத் திட்டங்கள் தொடர, தமிழக இளைஞர்களும், விவசாயிகளும், பெண்களும், ஏழை எளிய மக்களும் நலம் பெற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சி தொடர வாக்களிப்போம்.