
“பால் முகவர்களை மிரட்டுவதை கைவிடா விட்டால் ஆவின் பாலகங்கள் அமுல் பாலகங்களாக மாற்றப்படும்.” என்று, வின் நிர்வாகத்திற்கு பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கை:
ஆவினில் அதிகம் விற்பனையாகும், பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கக் கூடிய நெய், வெண்ணெய், பனீர், பாதாம் மிக்ஸ் போன்ற பால் பொருட்களின் உற்பத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பால் கொள்முதல் கடும் வீழ்ச்சியடைந்த காரணத்தால் அவற்றின் உற்பத்தியும் முற்றிலுமாக முடங்கிப் போனது.
இதனால் தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களுக்கு தினசரி அதிகளவில் விற்பனையாகும், பொதுமக்கள் விரும்பி வாங்கக் கூடிய நெய், வெண்ணெய், பனீர், பாதாம் மிக்ஸ் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களை வழங்காமல் விற்பனையே ஆகாத, ஆவினில் நேரடியாக உற்பத்தி செய்யப்படாத, ஆவின் பெயரால் தனியாரிடமிருந்து உற்பத்தி செய்து வாங்கப்படும், பால் சாராத, பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்காத முறுக்கு, மிக்சர், நூடுல்ஸ், குக்கிஸ், பாயாசம் மிக்ஸ், கூல் காபி, சத்துமாவு போன்ற விற்பனையே ஆகாத, சில நாட்களே காலாவதி தேதி கொண்ட அவ்வகை பொருட்களை கண்டிப்பாக வாங்கியே ஆக வேண்டும் என வலுக்கட்டாயமாக நிர்பந்தம் செய்து திணித்து வருவதோடு, காலாவதியான அவ்வகை பொருட்களை திரும்பப் பெற்று மாற்றித் தரவும் மறுத்து வருவதால் பால் முகவர்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக 1000ம் ரூபாய் முன்பணம் செலுத்தி ஆவின் முகவரானவர்கள் (FRO) விற்பனை ஆகாத அந்த வகை பொருட்களை வாரத்திற்கு 2500ரூபாய்க்கும், 10ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி ஆவின் முகவரானவர்கள் (FRO) வாரத்திற்கு 10000ரூபாய்க்கும் கண்டிப்பாக வாங்கியே ஆக வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு வாங்காத பால் முகவர்களுக்கு ஆவின் பால் வழங்க முடியாது என அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மூலமும், தனித்தனியாகவும் ஆவின் நிர்வாகம் திட்டவட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் தெரிவித்துள்ளது பால் முகவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆவின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை சீர்குலைத்து, தனியாரை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு, தனியாருக்கு சாதகமாக செயல்படுவது போல் தெரிகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்களுக்கு ஆவின் பால் பொருட்கள் முழுமையாக விநியோகம் செய்யப்படாத சூழலில் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகள் நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும், “ஆவின் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் சிறப்பு” செய்யும் மொத்த விநியோகஸ்தர்களுக்கும் மட்டும் அவை தாராளமாக விநியோகம் செய்யப்படுவதும், அதிலும் பால் முகவர்களுக்கு வழங்கப்படும் விலையை விட மிகக் குறைந்த விலைக்கு வழங்கப்படுவதும், ஆவினில் நேரடியாக உற்பத்தி செய்யப்படாத, அதிகளவில் விற்பனையாகாத மேற்கண்ட பொருட்களை வாங்கச் சொல்லி அவர்களை நிர்பந்தம் செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பால் கொள்முதலிலும், பால் உபபொருட்களின் உற்பத்தியிலும் கவனம் செலுத்தாமல் இருந்து விட்டு, வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய், பால் பவுடர் கொள்முதல் செய்வதிலும், ஆவினில் நேரடியாக உற்பத்தி செய்யப்படாத பொருட்களை கொள்முதல் செய்து அதனை பால் முகவர்கள் தலையில் கட்டி பண்டிகை காலங்களில் ஆவின் இனிப்புகள் கோடிகளில் விற்பனையானதாக ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் மார்தட்டிக் கொள்வது ஏற்புடையதல்ல.
எனவே பால் முகவர்களுக்கு ஆவின் நெய், வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பால் உபபொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யாமல், ஆவினில் நேரடியாக உற்பத்தி செய்யப்படாத பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் எனவும், அவ்வாறு வாங்காத பால் முகவர்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாது என மிரட்டல் விடுக்கும் போக்கினை ஆவின் நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும் எனவும், அவ்வாறு மிரட்டல் போக்கினை தொடர்ந்து ஆவின் நிர்வாகம் கடைபிடிக்குமானால் “ஆவின் பாலகங்கள் அனைத்தையும் அமுல் பாலகங்களாக மாற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கொள்ளப்படும்” அத்துடன் தமிழகத்தில் அமுல் பாலின் விற்பனையை துவக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை ஆவின் நிர்வாகத்திற்கு எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறோம்.