
சிவகாசி அருகே உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த கடை முழுவதும் எரிந்து சேதம் 3 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு கடைகளில் முழுவதும் பட்டாசுகள் இறக்கி வைத்து பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அளவுக்கு அதிகமான பட்டாசுகள் வைத்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனால் இன்று சிவகாசி அருகே உள்ள பாரப்பட்டி பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவகாசியைச் சேர்ந்த வைரவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் திடீரென பட்டாசுகள் வெடித்து சிதற தொடங்கியது அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.