
பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (அக்.7) முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 14 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பேசின்பிரிட்ஜ் சந்திப்பு – வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் சனிக்கிழமை (அக்.7) இரவு 11.30 முதல் மறுநாள் காலை 6.30 மணி வரை 7 மணிநேரம் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.
அதன்காரணத்தால், அந்த 7 மணி நேரத்துக்கு பேசின்பிரிட்ஜ் சந்திப்பு மற்றும் வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும் 14 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதி நிறுத்தம்: அக்.7-ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்தும், இரவு 9.45 மணிக்கு திருத்தணியிலிருந்தும் சென்ட்ரல் வரும் மின்சார ரயில்கள் ஆவடியுடன் நிறுத்தப்படும்.
அதேபோல், அக்.8 – ஆம் தேதி சென்ட்ரலிலிருந்து அதிகாலை 3.50 மணிக்கு திருத்தணிக்கும், அதிகாலை 5 மணிக்கு திருவள்ளூருக்கும் செல்லும் மின்சார ரயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக ஆவடியிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.