
சட்டப்பேரவையா? திமுக பொதுக்கூட்ட மேடையா? அரசாங்கம் நடத்தாமல் அரசியல் நடத்தும் கேவலத்திலும் கேவலத்தை அரங்கேற்றிய திமுக என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்றைய சட்டமன்ற சிறப்புக் கூட்டம் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைத்துள்ளது. கண்ணியக் குறைவான பேச்சுக்களால் தமிழகத்திற்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக அமைமைச்சரவை நிறைவேற்றிய பத்து தீர்மானங்கள் ஏற்புடையது இல்லை என விளக்கம் அளித்து தமிழக ஆளுநர் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு முன்பே கவர்னர் மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் அதே தீர்மானங்களை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்ற சிறப்பு கூட்டத்தை சபாநாயகர் கூட்டினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் முதல் ஆளும்கட்சி ஆளும்கட்சி கூட்டணி உறுப்பினர்களும் கண்ணியக் குறைவாக ஆளுநரை வசைபாடியுள்ளனர்.
ஆனால் ஒருவர்கூட ஆளுநர் குறிப்பிட்டுள்ள விளக்கம் சம்பந்தமாக பேசியதாக தெரியவில்லை. கல்வி பொது பட்டியலில் மத்திய அரசின் கீழ் வருகிறது. எனவே பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வரை நியமிக்க மாநில அரசிற்கு இதில் அதிகாரமில்லை என்பது தெளிவாக தெரிந்தும் திமுகவின் வரட்டு பிடிவாதத்தால் கண்மூடித்தனமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆளும் தரப்பில் கூறும் காரணம் சிறுபிள்ளை தனமானது.
இதே போன்ற நாடகத்தை தான் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை செய்து நிறைவேற்றிய தீர்மானத்தில் செய்தது. தற்போது மாநில அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கிவிட்டது. ஆனால் ஊடகங்கள் இது குறித்து அறிவார்ந்த விவாதம் நடத்தவில்லை. நடத்தியிருந்தால் ஆளும்கட்சி தனது பிடிவாதத்தால் மண்ணை கவ்விய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.
அதேசமயம் தமிழக ஆளுநரை, மத்திய அரசை தரம்தாழ்ந்து சட்டசபையில் தெருமுனையில் நின்று வாய்க்கு வந்தபடி பேசும் நாலாந்தர அரசியல்வாதிகள் போல முதல்வர் உள்பட ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசியது கண்டனத்திற்கு உரியது.
எதிர்க்கட்சிகள் பேசும்போது சபாநாயகர் தேவையில்லாமல் குறுக்கிட்டு திமுகவின் ஊதுகுழலாக கருத்தை திணிக்கிறார்.
சட்டசபையில் ஆளும்கட்சி திமுக அரசாங்கம் நடத்தவில்லை, அரசியல் நடத்தி சபையின் கண்ணியத்தை சீர்குலைத்து வருகிறது.
தமிழக முதல்வரும் சபாநாயகரும் இதுபோல் செயல்படுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
எனவே தமிழக சட்டபேரவை மாண்பை சீர்குலைக்காமல் எல்லா உறுப்பினர்களின் கருத்திற்கும் மதிப்பளித்து சபை நடத்தவும், கண்ணியமுடன் கருத்துக்களை எடுத்து வைக்கவும் சபை முன்னவர் என்ற முறையில் தமிழக முதல்வர் கவனம் கொடுக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.