
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
இறுதிப்போட்டி, இந்தியா vs ஆஸ்திரேலியா, அகமதாபாத் – 19.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணியை (240, கே.எல். ராகுல் 66, விராட் கோலி 54, ரோஹித் ஷர்மா 47, மிட்சல் ஸ்டார்க் 3/55, பேட் கம்மின்ஸ் 2/34, ஹேசல்வுட் 2/60, ட்ராவிஸ் ஹெட் 2/21) ஆஸ்திரேலிய அணி (43 ஓவர்களில் 241/4, ட்ராவிஸ் ஹெட் 137, லபுசேன் 58, பும்ரா 2/43, ஷமி 1/47, சிராஜ் 1/45) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அனைத்து பலகீனங்களும் வெளிவந்தன. வழக்கம் போல ரோஹித் ஷர்மா 47 ரன் கள் எடுத்து 9.4ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கு முன்னரே ஐந்தாவது ஓவரில் ஷுப்மன் கில் 4 ரன்னுக்கு ஆட்டமிழந்திருந்தார். 10 ஓவர் முடிவில் இந்திய அணி 2 விக்கட் இழப்பிற்கு 80 ரன் எடுத்திருந்தது. 11ஆவது ஓவரில் இருந்து 40ஆவது ஓவர் வரை ஆஸ்திரேலிய அணி இந்திய பேட்டர்களை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. 10ஆவது ஓவருக்குப்பின் இந்திய அணி ஒரு ஃபோர் அடிக்க 97 பந்துகள் ஆனது. ரோஹித் ஷர்மா 4 ஃபோர், 3 சிக்சர் அடித்தார். பிற பேட்டர்கள் அடித்த ஃபோர்கள் வருமாறு கோலி 4, ஐயர் 1, ராகுல் 107 பந்துகளில் 1 ஃபோர், சூர்யகுமார் 1, ஷமி 1, சிராஜ் 1 ஃபோர். இதுவரை பிரமாதமாக ஆடிய ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஜதேஜா மூவரும் உலகக் கோப்பையை வெல்லும் இனிய வாய்ப்பை இழந்தனர்.
ஆஸ்திரேலிய அணி ஆடவந்தபோது இந்திய பந்து வீச்சாளர்களின் பலகீனம் வெளிப்பட்டது. விக்கட் எடுக்க முடியவில்லை என்றால் ஷமி அணிக்கு எவ்வளவு மோசாமான் பவுலராக இருப்பார் என்பது இன்று தெரிந்தது. ரன்ரேட் 4.9ஆக இருக்கும்போது அவர் 6.71 ரன்ரேட்டிற்கு பந்து வீசினார். அடுத்து முகம்மது சிராஜும் ரன்ரேட் 6.41-ற்கு பந்து வீசினார். குல்தீப் யாதவ், ஜதேஜா இருவரின் சுழல் பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் அருமையாகச் சமாளித்தனர்.
மொத்தத்தில் ‘கப்’ நமக்கு இல்ல குமாரு.