குமரி மாவட்ட சிவாலய ஓட்டம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஓர் இளைஞரை மார்த்தாண்டம் போலீஸார் கைது செய்தனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடிச் சென்று தரிசனம் செய்யும் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளத்தை சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி தினம் பிப். 13 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் பிப். 12, 13 தேதிகளில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் அண்மையில் சிவாலய ஓட்டம் குறித்து அவதூறான கருத்துகள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது.
இது குறித்து திக்குறிச்சி மகாதேவர் கோயில் கமிட்டி நிர்வாகி வினோத் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில் இவ்வாறு பதிவிட்டது மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அஜீஸ் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.