
இராஜபாளையம் அருகே தென்னை மரங்கள், வாழை மின் கம்பங்களை
துவம்சம் செய்த காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை தென்னை மரங்கள் மற்றும் மின் கம்பங்களை ஒடித்து சேதப்படுத்தியது.
இராஜபாளையம் அருகே உள்ளது சேத்தூர். இங்கு, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நச்சாடைப் பேரி கண்மாய் உள்ளது.
இதில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. அதில், 10க்கு மேற்பட்ட விவசாயிகள், மா, தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன், ஒற்றை காட்டு யானையானது, அடிவாரப் பகுதிக்கு வந்துள்ளது. இது, விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
குறிப்பாக வரட்டோடை, பங்களா காடு, உடும்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானை வேருடன் சாய்த்து சேதப்படுத்தியது.
இதில் ஒரு மரம் மின்கம்பியில் விழுந்ததால் அங்கிருந்த 2 மின் கம்பங்களும் உடைந்து சேதமாகியுள்ளது. இதையடுத்து, விவசாயிகள், மின்சார வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், மின்சாரத்தை துண்டித்தனர்.
அதேவேளை, சேதமடைந்த பயிர்களை பார்வையிட வனத்துறையினர் வரவில்லையென விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய இழப்பீட்டை வழங்குவதோடு, வன விலங்குகள், விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.




