விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – செங்கோட்டை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சேத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெயத பலத்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை மற்றும் குளங்களில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் அதிகரித்து சாலையில் செல்வதால், வாகனங்கள் சாலையைக் கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மழை ஓயும் வரை ராஜபாளையம் – சேத்தூர் வழி சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் செங்கோட்டை கொல்லம் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் இந்த வழியைத் தவிர்ப்பது நல்லது.
ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் மதுரையில் இருந்து வரும் வழியில் ராஜபாளையம் – சங்கரன்கோவில் வழியாக செல்லலாம். தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் புளியங்குடி – சங்கரன்கோவில் வழியாக ராஜபாளையம், மதுரை செல்லலாம்.
இதுபோல் தேனி மாவட்டத்தில் இருந்து குமுளி வழியாக சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ததின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் சாலையில் வாகனங்கள் செல்ல முடியுமா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, குமுளி கம்பம் வண்டிப்பெரியார் வழியாக சபரிமலைக்குச் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் இன்றும் தென்காசி – நெல்லை – குமரி – தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மீண்டும் 24 மணி நேரத்திற்கு சிகப்பு வண்ண எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்து உள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.