சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு ஹிமாச்சலில் மீட்கப்பட்டது.
கார் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 6 கிமீ., தொலைவில் வெற்றியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). பொதுப் பணிகளிலும் சேவைகளிலும் ஆர்வம் காட்டிய இவர், திரைப்பட இயக்குனராகவும் இருந்தார். 2021ல் விதார்த் , ரம்யா நம்பீசன் நடிப்பில் ’என்றாவது ஒரு நாள்’ என்ற படத்தை இயக்கினார். தற்போது பெயரிடப்படாத கிரைம் திரில்லர் படத்தை இயக்கும் வேலையில் இருந்தார்.
இதன் பின்னணியில், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கோபிநாத் (32) என்பவருடன், ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றார். அங்கே படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைப் பார்வையிட்டு வந்தார். இந்நிலையில் பிப்.4ஆம் தேதி ‘இன்னோவா’ காரில், கோபிநாத், வெற்றி ஆகியோர், ஹிமாச்சல பிரதேசம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் பாய்ந்து கவிழ்ந்தது. பாய்ந்த வேகத்தில் 200 அடி பள்ளத்தில் உருண்டு ஆற்றில் விழுந்து மிதந்தது.
இதை அடுத்து, ஹிமாச்சலப் பிரதேச போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் உயிரிழந்த நிலையில் டிரைவர் தன்ஜின் உடல் மீட்கப்பட்டது. படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய கோபிநாத் மீட்கப்பட்டார்.
எனினும், வெற்றி குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மாயமானதாகக் குறிப்பிடப்பட்டு, அவரைத் தேடும் பணியில் பலர் ஈடுபடுத்தப் பட்டனர். தொடர்ந்து மீட்புப் படையினர் வெற்றியைத் தேடி வந்த நிலையில், 8 நாட்களுக்குப் பிறகு நதியில் இருந்து இன்று வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. இதன்பின், பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் செய்தி, தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.