ரூ. 2 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை மீட்க போராடிய இந்துமுன்னணி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மீது போடப்பட்ட பொய் வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி.சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நெல்லையில் கிறிஸ்துவ ஆக்கிரமிப்பில் இருந்து, ரூ. 2 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை நேற்று அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். ஆனால் அதை மீட்பதற்காகப் போராடிய இந்து முன்னணி அமைப்பினர் மீது பல்வேறு வழக்குகளை காவல் துறை பதிவு செய்து, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது. இந்நிலையில், நியாயமாக செயல்பட்டு, கோயில் சொத்தினை மீட்க உதவிய இந்து முன்னணி தொண்டர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை ரத்து செய்வது தான் பொருத்தமாக இருக்கும் என்று இந்து முன்னணி அமைப்பினர் கூறி வருகின்றனர். இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை….
திருநெல்வேலி மாநகரம் கருப்பந்துறை கிராமத்தில் உள்ள அருள்மிகு அழியாபதீஸ்வரர் அருள்தரும் சிவகாமி அம்பாள் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட நந்தவன நிலம் சுமார் 70 சென்ட் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் ஆகும்.
இந்த இடத்தினை கடந்த சில வருடங்களாக கருப்பந்துறை கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தர்மராஜ் என்ற கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் செங்கல் சூளை , கோழிப்பண்ணை மற்றும் தற்காலிக சர்ச் அமைத்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருந்தார்.
இந்த இடம் கோவில் நிலம் என முதலில் அறநிலையத்துறையிடம் புகார் அளித்த போது அவர்கள் அதற்குரிய ஆவணங்கள் தங்களிடம் இல்லை எனக்கூறி நடவடிக்கை எடுக்க மறுத்த நிலையில், உரிய ஆவணங்களுடன் இந்துமுன்னணி சார்பில் அறநிலைத்துறையிடம் புகார் அளித்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கடந்த மாதம் இந்துமுன்னணி சார்பில் திருக்கோவில் முன்பு ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை போராட்டத்தை இந்துமுன்னணி நடத்தியது.
அதன் பின்னர் கோவில் நிர்வாகம் இந்த இடத்தினை வருவாய் துறை அதிகாரிகளோடு இணைந்து அளவீடு செய்து எல்லை கற்களை நாட்டினர்.
ஆனால் அதன் உள்ளே இருந்த சர்ச் உள்ளிட்ட கட்டிடங்கள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் அந்தக் கட்டிடங்களை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி அந்த கிராமத்தை சார்ந்த இந்துமுன்னணி மாவட்ட செயலாளர்கள் சங்கர் மற்றும் சுரேஷ் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடமும் அறநிலையத்துறைக்கும் புகார் அளித்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தர்மராஜ் தூண்டுதலில் ஒரு நபர் இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் சங்கர் அவர்கள் நடத்தி வரும் கடையில் அவர் இல்லாத நேரத்தில் வந்து மது குடித்துவிட்டு தகராறு செய்ததோடு சங்கரின் மனைவியை அடிக்க முற்பட்டுள்ளார் அதனை தடுக்க வந்த சங்கரின் மகனையும் அடித்து தாக்கியுள்ளார் இது குறித்து சங்கரின் மனைவி அளித்த புகாரின் பேரில் தர்மராஜ் மற்றும் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தர்மராஜ் தூண்டுதலில் கடையில் வந்து தகராறு செய்த நபர் தன்னை சாதி சொல்லி திட்டியதாக சங்கர் மனைவி மீது பொய் புகார் கொடுத்ததன் அடிப்படையில் சங்கரின் மகன் மீது மற்றும் மனைவி மீது பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு கல்லூரியில் படித்து வரும் சங்கரின் மகனை நெல்லை மாநகர போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது மிகுந்த வேதனைக்குரியது.
சங்கரின் கடைக்கு வந்து வீட்டில் உள்ள நபர்களிடம் தகராறு செய்து சங்கரின் மகன் மற்றும் தாக்கியதோடு நில்லாமல், தன்னை தற்காத்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லாமல் தர்மராஜ் தூண்டுதலில் உள்நோக்கம் கொண்டு கொடுக்கப்பட்ட புகாரென தெளிவாக தெரிந்தும், இயந்திர போல் காவல்துறை வழக்கு பதிவு செய்து கல்லூரியில் பயின்று வரும் மாணவனை கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது ஆகும்.
மேலும் மேற்படி தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் உள்ளிட்ட 12 பேர் மீதும் பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாட்டில் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில் இடத்தை மீட்பதற்காக மனு கொடுத்த காரணத்திற்காக கோவில் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருந்த தர்மராஜ் தூண்டுதலில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
அரசுத்துறையின் நிலத்தை மீட்க போராடுபவர்கள் மீதே இது போல் வழக்கு பதிவு செய்தால் பொது நல சிந்தனையோடு அரசுக்கு உதவிட யார் முன்வருவார்கள்? என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
தமிழக காவல்துறை தலைவர் அவர்களும் நெல்லை மாநகர காவல் ஆணையர் அவர்களும் இது குறித்து நேரடியாக விசாரணை நடத்தி அந்த பொய் வழக்குகளை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது