இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்ட நிலையில், “தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் இது அமல்படுத்தப்பட்டுள்ளது ஏன்?” என்று கேட்டு, பாஜக., மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநில அரசுகள் சிஏஏ-வை எங்கள் மாநிலத்தில் அமல் படுத்த விடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை:-
பொய் சொல்கிறார்கள்:
வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. ராகுல், மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், பினராயி விஜயன் போன்றோர் வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் சொல்கிறார்கள்.
,மாநில அரசுக்கு அதிகாரமில்லை:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. அகண்ட பாரதத்தில் ஓர் அங்கமாக இருந்தவர்கள் மதத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுக்க வேண்டியது நமது தார்மீக, அரசியல் சாசன கடமை.
இஸ்லாமியர்களும் விண்ணப்பிக்கலாம்
இஸ்லாமியர்களும் கூட குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் உரிமை உள்ளது. யாருக்கும் கதவுகள் மூடப்படவில்லை. குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான கால நிர்ணயமும் இல்லை. போதிய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம்.
குடியுரிமை வழங்குவது; பறிப்பதல்ல!
சிஏஏ என்பது, குடியுரிமை வழங்குவது மட்டுமே. யாருடைய குடியுரிமையையும் பறிக்காது. மக்களவைத் தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டம் அமலுக்கு வரும் என கடந்த 4 வருடங்களாக 41 முறை நான் கூறியுள்ளேன்.
திரும்பப் பெறப்படாது:
சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது. நம் நாட்டில் இந்திய குடியுரிமையை உறுதி செய்வது நமது இறையாண்மை உரிமை. அதில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். எங்களைக் குற்றம் சாட்டுவதை விட எதிர்க்கட்சிகள் ஏதும் செய்யவில்லை.
இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வர முடியாது என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். சிஏஏ பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. சிஏஏ-வை திரும்பப் பெறுவது நடக்காத செயல். இது முழுக்க முழுக்க அரசமைப்பு ரீதியாக செல்லும்படியாகும் சட்டம். இந்தச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை.
75 ஆண்டுகளாக சொல்லி வருவது
சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஏர் ஸ்டிரைக் நடத்தப்பட்டபோது கூட அரசியல் ஆதாயம் தேடினார்கள். அதேபோல் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டபோதும் அதைத்தான் செய்தார். நாங்கள் 1950-ல் இருந்து 370 சட்டப்பிரிவை நீக்குவோம் என்று சொல்லி வந்தோம்.
நிதானம் இழந்த கேஜ்ரிவால்
தில்லி முதல்வர் கேஜ்ரிவால், தன்னுடைய ஊழல் வெளிப்பட்ட நிலையில்,நிதானத்தை இழந்துள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அந்த மூன்று நாடுகளில் இருந்து வந்தவர்கள் இந்தியாவில்தான வாழ்ந்து வருகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாது. அவருக்குக் கவலை இருந்தால், ஏன் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் மற்றும் ரோகிங்க்யாவிற்கு எதிராக அவர் பேசவில்லை? அவர் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார். அவர் பிரிவினையின் பின்னணியை மறந்து விட்டார். அவர் அகதிகளின் குடும்பத்தை சந்திக்க வேண்டும்.
பொய் அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள்
ஓவைசி, ராகுல் காந்தி, கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி பொய் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு நேரம் என்பது முக்கியமல்ல. பாஜக., தனது தேர்தல் அறிக்கையில் சிஏஏ அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. 2019-ல் மசோதா நிறைவேறிய நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் கால தாமதம் ஆனது. எதிர்க்கட்சிகள் திருப்பதிப்படுத்தும் அரசியல் செய்ய விரும்புகிறார்கள். தங்களுடைய வாக்கு வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
சிஏஏ-வை அமல்படுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என உத்தவ் தாக்கரேயிடம் கேட்க விரும்புகிறேன். சிறுபான்மையினர் வாக்குகளுக்கான அவர் திருப்பதிப்படுத்தும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.
தேர்தலுக்குப் பிறகு ஒத்துழைப்பார்கள்
இந்திய அரசமைப்பின் 11-வது சட்டப்பிரிவு குடியுரிமை தொடர்பான விதிமுறைகளை உருவாக்குவதற்கான அனைத்து அதிகாரங்களையும் நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. இது மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசைச் சார்ந்தது அல்ல. தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொருவரும் ஒத்துழைப்பாளர்கள் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அந்த பேட்டியில் அமித் ஷா தெரிவித்துள்ளார்.