மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். நெல்லையில், தற்போதைய சட்டமன்ற பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.
இதேபோல், தென்சென்னையில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சென்னையில் வினோத் பி செல்வம், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், நீலகிரியில் எல்.முருகன் கிருஷ்ணகிரியில் நரசிம்மன், வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூரில் பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் பாஜக.,வின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவதால், பாஜக., பட்டியலில் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
முன்னதாக முதலில் வெளியான பட்டியலில், தவறுதலாக தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. சற்று நேரத்தில் திருத்தப்பட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் திருநெல்வேலியில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பாஜக., 20 தொகுதிகளிலும் பாமக., 10 தொகுதிகளிலும் மீதமுள்ள 9 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வந்த பிறகு தான் முழுமையான தமிழக போட்டி நிலவரம் தெரியவரும்.