- தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் கசாப்பு கடைக்கு செல்லும் அவலம்.
- அறம் இல்லாத அறநிலையத்துறையின் அலட்சியம்…
கோயிலுக்கு தானமாகக் கொடுத்த பசு மாட்டை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…!
தமிழகத்தில் உள்ள ஆலயங்களுக்கு பக்தர்களால் பசுக்கள் தானமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு தானமாக வழங்கப்படும் பசுக்களை ஆலய நிர்வாகம் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களிடம் எந்தக்காரணத்தைக் கொண்டும் பசுக்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி ஆவணத்தில் எழுதி வாங்கிக் கொண்டு கொடுக்கின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
பெரும்பாலும் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் பசுக்களை இடைத்தரகர்கள் மூலம் கசாப்பு கடைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு புனித நோக்கத்திற்காக இறை நம்பிக்கையுடன் ஆலயத்திற்கு வழங்கப்படும் பசுக்களை இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்க முடியாத நிலையில் நிர்வாகத் திறனற்று இருக்கிறது.
இதனால் இறை நம்பிக்கையுடன் இறைவனுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் கசாப்பு கடைக்கு செல்வது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
ஆலயங்களுக்கு வழங்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை மற்றும் அதனை பெற்றுக் கொள்ளும் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை, பசுக்களை பெற்றுச் சென்ற சுய உதவி குழு நபர்கள் தற்போது வைத்திருக்கும் பசுக்களின் எண்ணிக்கை போன்ற அனைத்து விவரங்களையும் அரசு ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
ஆலயத்திலிருந்து தானமாக பெற்ற பசுவை விற்க மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு அதனை விற்பனை செய்யும் சுய உதவிக் குழு நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.