பதினைந்தாம் நாள்
ஐபிஎல் 2024 – 05.04.2024 – ஹைதராபாத்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
சென்னை அணியை (166/5, ஷிவம் துபே 45, அஜிங்க்யா ரஹானே 35, ரவீந்த்ர ஜதேஜா 31*) ஹதராபாத் அணி (18.1 ஓவரில் 166/4, எய்டன் மர்க்ரம் 50, அபிஷேக் ஷர்மா 37, ட்ராவிஸ் ஹெட் 31) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்த்ரா (12 ரன்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (26 ரன்) 8 ஓவருக்குள்ளே ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் அஜிங்க்யா ரஹானே (35 ரன்), ஷிவம் துபே (24 பந்துகளில் 45 ரன்), ஜதேஜா (31 ரன்) ஆகியோர் சிறப்பாக வீளையாடியும் அதிரடியாக ரன் சேர்க்க முடியவில்லை.
சன்ரைசர்ஸ் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களும் நன்றாக பந்துவீசினர். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது.
166 ரன் என்ற இலக்கை அடைய இரண்டாவதாக ஆட வந்த சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 12 பந்துகளில் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ட்ராவிஸ் ஹெட் (24 பந்துகளில் 31 ரன்), மர்க்ரம் (36 பந்துகளில் 50 ரன்) என அனைவரும் நன்றாக ஆடினர். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் ரேட் சென்னை அணியின் ரன் ரேட்டைவிட எப்பொதும் அதிகமாகவே இருந்தது.
எனவே எந்தவிதப் பதற்றமும் இன்றி 18.1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 166 ரன் எடுத்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணியின் கிளாசனும் சிக்ஸ் அடிக்கவில்லை; சென்னை அணியின் தோனியும் சிக்ஸ் அடிக்கவில்லை.
சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் ஷர்மா தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.