தென்காசி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 37வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.
தொகுதியில் ஆண் வாக்காளர்கள்: 7,42,158
பெண் வாக்காளர்கள்: 7,73,822
இதர வாக்காளர்கள் 203 உள்ளனர்.
தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), ராஜபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கும்.
இவற்றில் தற்போது, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் திமுக வசமும், கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வசமும் உள்ளன. கடந்த 1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில் பொது தொகுதியாக இருந்த தென்காசி, அதன் பின்னர் இப்போது வரை தனி தொகுதியாக நீடிக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள ஒரே தனி தொகுதி தென்காசியே.
தென்காசி தொகுதியில் 1957 முதல் காங்கிரஸ் தொடர்ச்சியாக 9 முறையும், அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ், திமுக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1957-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த எம்.சங்கரபாண்டியன், 1962-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த எம்.பி.சாமி, 1967-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த ஆர்.எஸ்.ஆறுமுகம், 1971-ம் ஆண்டு காங்கிரஸை சேர்ந்த செல்லச்சாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1977, 1980, 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 5 முறை காங்கிரஸை சேர்ந்த எம்.அருணாச்சலம் வெற்றி பெற்றார். காங்கிரஸ் ஆட்சியில் அவர் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 1996-ம் ஆண்டு தமாகா சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 6-வது முறையாக அருணாச்சலம் வெற்றி பெற்றார்.
1998, 1999-ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த எஸ்.முருகேசன் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2004-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.அப்பாதுரை, 2009-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.லிங்கம், 2014-ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த வசந்தி முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் முதல் முறையாக திமுக வெற்றி பெற்றது. திமுகவைச் சேர்ந்த தனுஷ் எம்.குமார் 4,76,156 வாக்குகள் பெற்றார். இவர் அதிமுக வேட்பாளரான புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை விட 1,20,286 வாக்குகள் கூடுதலாக பெற்றார். ஆனால், இம்முறை தனுஷ் எம்.குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, சங்கரன்கோவிலைச் சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
தென்காசி தொகுதியில் தொடர்ந்து 6 முறை போட்டியிட்டு தோல்வியடைந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இப்போது 7-வது முறையாக அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகதலைவர் ஜான்பாண்டியன், இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக தென்காசி தொகுதியில் களம் காண்கிறார்.
இசை மதிவாணன்
நாம் தமிழர் கட்சியில் கடந்த முறை போட்டியிட்ட இசை மதிவாணன் மீண்டும் போட்டியிடுகிறார். சுயேச்சைகள் உட்பட 15 பேர் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலத்தை நம்பி திமுக வேட்பாளர் களம் காண்கிறார்.
அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தை நம்பி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிகளம் காண்கிறார். பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் தனது கட்சியின் பலத்தை நம்பி தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் களம் காண்கிறார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய திமுக எம்.பி. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, மற்றகட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
தென்காசி மக்களவைத் தொகுதியில் உள்ள குற்றாலத்தை சர்வதேச அளவிலான சுற்றுலா தலமாக்க வேண்டும். விவசாயம், நூற்பாலைகள் மருத்துவ துணி தயாரிப்பு ஆயுத்த ஆடை தயாரித்தலை முக்கிய தொழிலாக கொண்ட தென்காசி மாவட்டத்தில் சென்ட் தொழிற்சாலை, மாம்பழச்சாறு தொழிற்சாலை, எலுமிச்சை சார்ந்த தொழிற்சாலை, ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வாசுதேவநல்லூர் செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்ய வேண்டும், உள்ளார் தலையணை அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும், விருதுநகர் முதல் செங்கோட்டை வரை இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் . செங்கோட்டை ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிமனை,கூடுதல் பிட்லைன் வசதிகளை ஏற்படுத்தி செங்கோட்டை மில் இருந்து இந்தியாவில் முக்கிய தொழில் நகரமாக உள்ள பெங்களூரு மும்பை கோவை செக்கந்தராபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு ரயில் வசதி நேரடியாக ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைகளாக உள்ளது .
அரசியல் கட்சிகளால் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு தொகுதியில் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
இந்த மக்களவைத் தொகுதியில் தென்காசி மாவட்டத்தை சோ்ந்த தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய 2 பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள்தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணிகள் மாவட்ட தோ்தல் அதிகாரியும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தோ்தல் பொதுப் பாா்வையாளா் டோபேஸ்வா் வா்மா உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தேர்தலுக்கு தீவிர ஏற்பாடுகளை செய்துள்ளனர்.