
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் திமுக., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் அராஜகத்துக்கு, துணைபோகும் காவல்துறை மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:
தேசிய வாக்காளர் பேரவை சார்பில் தேர்தலில் 100% வாக்குகளை செலுத்தவும், நல்லவர்களை தேர்ந்தெடுக்கவும் வலியுறுத்தி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிதம்பரம் நகரம் விளங்கி அம்மன் கோவில் தெருவில், நேற்று 05/04/24 காலை 11:30 மணியளவில் திண்ணை கூட்டம் நடத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ் மாநில பொறுப்பாளர் குரு. சுப்ரமணியம் மற்றும் அவருடன் சென்ற பொறுப்பாளர்களான அன்பரசன். ராகவன், சஞ்சய் ஆகியோர் மீது திமுக கவுன்சிலர்கள் C.K.ராஜன் மற்றும் ஜெய்ஸ் விஜயராகவன், பேட்டை பாலு பாலசுப்ரமணியம், அப்பு சந்திரசேகர் ஆகியோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் வன்முறை வெறியாட்டம் ஆடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல். அடிப்பட்டவர்களை விசாரணை என்னும் பெயரில் மாலை 06:30 மணி வரை காவல் நிலையத்தில் வைத்து மிரட்டி தகாத வார்த்தைகளை பேசி அச்சுறுத்தியுள்ளனர். திமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் ரகுபதி மற்றும் அவர் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.
ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதால்தான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட DSP ரகுபதி தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்களாட்சி நடைமுறையில் வாக்குகளை செலுத்துங்கள், நூறு சதவீத வாக்கு பதிவு ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கும், ஓட்டிற்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என அரசாங்கம் தனது செலவில் பிரச்சாரம் செய்கிறது
இதே கருத்துடன் நல்லாட்சி அமைவதற்கு உங்கள் வாக்குகளை அவசியம் பதிவு செய்யுங்கள் என்று வீடுவீடாக அரசியல் சார்பு இல்லாமல் தேசிய வாக்காளர் பேரவை சார்பாக எடுத்துக்கூறி வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய பிரச்சாரம் செய்தவரை தாக்குவது சமூக விரோத செயல்.
ஓட்டிற்கு பணம் கொடுத்து ஆசை தூண்டி வாக்குகளை பெற முயற்சி நடப்பதாக பல புகார்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது கூறப்படுகிறது. இத்தகைய நேர்மையான, ஜனநாயக ரீதியிலான கருத்தால் மக்கள் விழிப்படைந்து ஊழல் முறைகேடு சாதிய வன்முறைக்கு எதிராக வாக்களித்து விடுவார்கள் என்ற பயத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
பல இடங்களில் தமிழக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் வாகனங்களை முறையாக சோதனையிடாமல் அனுப்பிய அதிகாரிகள் பற்றி நடுநிலை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன்பிறகு தமிழக அரசு அதிகாரிகள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதிலிருந்து தமிழக அரசு அதிகாரிகளில் உள்ள கருப்பு ஆடுகள் எப்படி செயல்படுகிறது என்பதை நேர்மையான தேர்தல் அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முறையாக அமைதியாக நடைபெற வேண்டுமானால் ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.
எனவே சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வன்முறையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிந்து அவர்களின் பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
மேலும் திமுக கூட்டணி கட்சிகள் வன்முறை வெறியாட்டம் நடக்க சாத்தியம் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்பு படையை பாதுகாப்பிற்காக நிறுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக்
கொள்கிறோம்.