மதுரை திருமங்கலம் அருகே சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் , தளவாய்புரத்திலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அந்தக் காரை கனகவேல் மகன் மணி ஓட்டி வந்தார்.
இந்த நிலையில், கார் விருதுநகர் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உள்ள சிவரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எஸ்.பி. நத்தம் சாலையிலிருந்து திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூரைச் சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றார்.
எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, அதிவேகத்தில் வந்த காரை ஓட்டுநர் கட்டுப்படுத்த முயன்றார்.
எனினும் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி தொடர்ந்து முன்னால் சென்ற டூவீலர் மீது மோதிய கார், வேகத்தில் நடுச் சாலைத்தடுப்பில் பின் சக்கரம் மோடி தூக்கி அடித்து, சாலையின் எதிர்ப்புறம் இருந்த தடுப்பு கம்பியில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் இரு சக்க வாகனத்தில் சென்ற கொய்யாப்பழ வியாபாரி பாண்டியும் உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த மணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் காரில் வந்த கனகவேல் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி உறவினர் நாகஜோதி மற்றும் சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.