- மதுரை அலங்காநல்லூர் அருகே கண் துடைப்பிற்காக நடத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம்
- முகாமில் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால், மக்கள் மற்றும் விவசாயிகள் அதிருப்தி
- மனுக்களை எங்கே கொடுப்பது என, தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்த பொதுமக்கள் !
சோழவந்தான்: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கொண்டையம்பட்டி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது .
இத்திட்டத்தில், கொண்டையம்பட்டி, அழகாபுரி , சின்ன இலந்தைகுளம், கல்வேலிபட்டி மேல சின்னனம்பட்டி, அய்யங்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
இந்த முகாமின் நோக்கமானது அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அந்த மனுக்களுக்காக உடனடி தீர்வு காண்பதே மக்களுடன் முதல்வர் திட்டம் ஆகும்.
ஆனால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில், இன்று நடைபெற்ற முகாமில் , பல அரசு துறைகளில் அதிகாரிகள் வராததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மனுக்களை கையில் வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக அலைந்தது பரிதாபமாக இருந்தது.
மனுக்களை வாங்க உரிய அதிகாரிகள் இல்லாததால், நேரம் ஆக ஆக மனுக்கள் கொடுக்க வந்த பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் குழந்தையுடன் வந்த பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
குறிப்பாக, இந்த முகாமில், பொதுப்பணித்துறை , மாசுக்
கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத்துறை போன் துறை சார்ந்த அதிகாரிகள் வராததால், அது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காண மனுவை எழுதி கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
இதை யாரிடம் வழங்க வேண்டும் என்று தெரியாமல், மனுவுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என, பொதுமக்களும் விவசாயிகளும் கூறினர்.
மக்களை தேடி மருத்துவம் எல்லாம் தேடி கல்வி போன்ற அரசின் எந்த ஒரு திட்டங்களும் பொதுமக்களுக்கு முறையாக பயனளிக்காத நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டமும் வெறும் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது, மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கியதாக, அங்கிருந்த பொதுமக்கள் பேசிச் சென்றனர்.