தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக 78 வது சுதந்திர தின விழா மதுரை ரயில்வே காலனி செம்மண் திடலில் வியாழக்கிழமையன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, இந்த நிதி ஆண்டில் கடந்த நான்கு மாதங்களில் மதுரை கோட்டத்திற்கு ரூபாய் 414.05 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பயணிகள் சேவையின் மூலம் ரூபாய் 270.94 கோடியும், சரக்கு போக்குவரத்து மூலம் ரூபாய் 115.60 கோடியும், இதர பயணிகள் வருமானத்தின் மூலம் ரூபாய் 19.76 கோடியும், வணிக ஒப்பந்தங்கள் மூலம் ரூபாய் 7.75 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் ரயில்களில் 1.49 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். சரக்கு ரயில்கள் மூலம் 0.938 மில்லியன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் 99 சதவீத ரயில்கள் காலதாமதம் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளன.
இது இந்திய ரயில்வேயில் உள்ள கோட்டங்களை காட்டிலும் முதன்மை சாதனை அளவாகும். சரக்கு ரயில்கள் சராசரியாக மணிக்கு 38.19 கி.மீ. வேகத்தில் இயக்கப் படுகின்றன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.77 சதவீதம் அதிகமாகும்.
இதுவும் இந்திய ரயில்வேயில் முதன்மை சாதனையாக உள்ளது. பயணிகளின் வசதிக்காக தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே வாரம் இருமுறை சேவை விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 14 ரயில் பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் ஆகஸ்ட் 14 முதல் 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
மேலும் இந்த ரயில் சேவை ஆகஸ்ட் 15 முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 13 ரயில் நிலையங்களில் நடைமேடைகள் உயர்த்தப்பட்டுள்ளன. வெயில் மற்றும் மழை பொழிவிலிருந்து பாதுகாக்க 39 நீண்ட மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் நிறுத்தும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தயார் நிலையில் உள்ள கழிவறைகள் ரயில் நிலையங்களில் 9 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. 17 ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டு வரும் 42 மின் தூக்கிகளில் ஏற்கனவே 7 மின்தூக்கிகள் பயணிகள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் 6 மின் தூக்கிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.
மீதமுள்ள 29 மின் தூக்கிகள் அமைக்கும் பணி விரைவு படுத்தப்பட்டு இந்த ஆண்டிற்குள் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ரயில் நிலையங்களில் குளிர் குடிநீர் இயந்திரங்களுடன் இந்த ஆண்டு கூடுதலாக வழங்கப்பட்ட மண்பானை தண்ணீர் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பயணிகள் வரிசையில் காத்திருக்காமல் பயண சீட்டு பெற முக்கிய ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மொபைல் பயணச்சீட்டு செயலி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4.5 சதவீதமாக இருந்த விற்பனை ஜூலை மாதம் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உள்ளூர் தயாரிப்புகளை பிரபலப்படுத்த ரயில் நிலையங்களில் மிகக் குறைந்த வாடகையில் 43 விற்பனை நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் தயாரிப்புகள் இதுவரை ரூபாய் 55.70 லட்சம் அளவுக்கு விற்பனையாகி உள்ளன.
வயது முதிர்ந்தோர், உடல் நலம் குன்றியவர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வசதிக்காக 7 ரயில் நிலையங்களில் பேட்டரி கார் சேவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிதாக மேம்படுத்தப்பட்டு வரும் அம்ரித் பாரத் ரயில் நிலையங்களில் விழி ஒளியிழந்த பயணிகள் வசதிக்காக ரயில் நிலைய நுழைவாயிலில் இருந்து ரயில் பெட்டி செல்லும் வரை நடைபாதையில் சிறப்பு குறியீட்டு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
15 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நுழைவாயில் வளைவு, காத்திருக்கும் அறைகள், மின் தூக்கிகள், நடைமேடை சுற்றுச்சுவர், வெளிவளாக மேம்பாடு, பசுமை பூங்கா, அணுகு சாலை விரிவாக்கம், கழிப்பறை வசதி, மேற்கூறையுடன் கூடிய வாகன காப்பகங்கள், நடைமேடை மேற்கூரைகள், ரயில் நிலைய முகப்பு மேம்பாடு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த வசதிகளுக்காக ரூபாய் 115.85 கோடி செலவிடப்பட்டு வருகிறது. மேலும் திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூபாய் 150.69 கோடி செலவிடப்படுகிறது.
மதுரை கோட்டத்தில் 80 சதவீத ரயில் பாதைகளில் ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 94.7 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 69.75 கி.மீ. ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் விபத்துகளை தவிர்க்க 18 ரயில்வே கேட்டுகள் சிறப்பு ஏற்பாடுகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. 34 கேட்டுகளில் எளிதாக திறந்து மூட கீழ்மேல் இறங்கும் நீண்ட இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.
27 கேட்டுகளில் சாலை வாகனங்கள் விரைவாக கடந்து செல்ல மின் ஆற்றல் மூலம் கேட்டை திறந்து மூடும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே மருத்துவமனையில் தலையில் ஏற்படும் காயங்களில் எலும்புகளை சரிப்படுத்த கிரானியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நுரையீரல் சிகிச்சைக்கும் நவீன மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே ஊழியர்களின் வசதிக்காக மதுரையில் நவீன வசதிகளுடன் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட உள்ளது.
ரயில்வே சொத்துக்களை திருடிய 70 வெளிநபர்கள் ரயில்வே பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே சட்டத்தை மீறிய 3380 நபர்கள் தண்டிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 19.75 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
வீட்டை விட்டு ஓடி வந்த 125 குழந்தைகள் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டு உள்ளனர். பயணிகள் தொலைத்த ரூபாய் 56.60 லட்சம் மதிப்புள்ள உடமைகள் ரயில்வே பாதுகாப்பு படையால் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூபாய் 150 கோடி மதிப்புள்ள சட்டப்படி தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 375 ரயில்வே ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
764 ரயில்வே ஊழியர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 396 ஊழியர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. பணியில் மரணம் அடைந்த 12 ஊழியர்களின் வாரிசுகளுக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் ரயில் வாசல் படிகளில் பயணம் செய்த 27 விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் ரயில் பெட்டி நுழைவாயில் படிகளில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ பயணம் செய்ய வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
முன்னதாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ரயில்வே பெண்கள் சங்க மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை கோட்ட ரயில்வே மேலாளர் ஏற்றுக்கொண்டார்.
விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல். நாகேஸ்வரராவ், வேக சக்தி முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி டி. சங்கரன் உட்பட அதிகாரிகளும் ரயில்வே ஊழியர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் ரயில்வே பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.