அருப்புக்கோட்டையில் புதிய ரயில் வருகைக்கு வரவேற்பு:
அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் செங்கோட்டை மைசூர் சிறப்பு ரயிலுக்கு அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு
ரயில் பயணிகளுக்கும் ரயில் ஓட்டுநருக்கும் கடலை உருண்டை வழங்கி சால்வை அணிவித்து வரவேற்பு
காரைக்குடியில் இருந்து மைசூர் வரை அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதன்முறையாக அருப்புக்கோட்டை வழியாக மைசூரில் இருந்து செங்கோட்டை சென்ற இந்த சிறப்பு ரயிலுக்கு அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அருப்புக்கோட்டை ரயில் பயணிப்போர் சங்கத்தினர் ரயில் ஓட்டுனருக்கு, சால்வை அணிவித்தும் கடலை உருண்டை வழங்கியும் வரவேற்பு அளித்தனர். அதேபோல அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த ரயில் பயணிகளுக்கும் கடலை உருண்டை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அருப்புக்கோட்டை வழியாக வாரம் இரண்டு நாட்கள் வியாழன், ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்த புறப்பட்டு விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி திருச்சி சேலம் நாமக்கல் உள்ளிட்ட ஊர்கள் வழியாக பெங்களூர் மைசூரு செல்ல உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை ரயில் பயணி போர் சங்கத் தலைவர் ஆனந்தன், செயலாளர் சரவணன், ஆலோசகர் மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டையில் புதிய ரயிலுக்கு வரவேற்பு:
மைசூரில் இருந்து செங்கோட்டைக்கு வந்த புதிய ரயிலுக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் வரவேற்று இனிப்புகள் வழங்கினர். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் இரவு 7 மணிக்கு புதிய ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.
முதன் முதலாக பயணம் மேற்கொண்ட செங்கோட்டை – மைசூர் சிறப்பு விரைவு ரயில் துவக்க விழாவில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் முரளி, செயலர் கிருஷ்ணன், பொருளாளர் சுந்தரம், மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் சங்கர பாண்டியன், முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் அனந்த பத்மனாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரவு 7.45க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தின் இரண்டாம் நடைமேடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரயிலை வழியனுப்பி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள், ரயில் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.