ஆதீனத்தின் சொத்துக்களை ஆக்கிரமிக்க சதி? மடத்தின் பாரம்பரியத்தை இழிவுபடுத்த அறநிலையத்துறை எண்ணமா? என்று கேள்வி எழுப்பி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோவில் 28வது ஆதீனம் மகாலிங்கம் ஆதீனத்தின் மரபை மீறி தனது விருப்பப்படி ஒரு பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
திருமணம் அவரது தனிப்பட்ட விருப்பம் அதுகுறித்து கருத்து கூற ஏதும் இல்லை. ஆனால் அதனை அவர் கையாண்ட விதம் இந்துசமய நம்பிக்கையை அவர் கைவிட்டதை வெளிப்படுத்தியது. திருமணம் முறைப்படி இல்லாமல் சட்ட ரீதியான பதிவு திருமணம் மட்டும் செய்து கொண்டுள்ளது இதனை வெளிப்படுத்துகிறது.
மேலும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும் இந்துக்களை குழப்பிடவும், இதற்கு முன்பு திருமணமானவர்கள் ஆதீனமாக இருந்ததாக தவறான கருத்தை கூறினார். திருமணமானவர் வானப்ரஸ்தமாக குடும்ப உறவை துறந்து துறவியாக அந்த ஆதீனத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்கள். இவர் கூறியது திருமணம் செய்து இல்லறத்தில் இருந்து யாரும் அதில் செயல்படவில்லை.
மகாலிங்கம் அவர்கள் சூரியனார் கோவில் ஆதீனமாக இருந்தபோதே ஆளும் திமுகவின் துதிபாடியாக செயல்பட்டார். அதன் காரணமாக மற்ற ஆதீனத்தின தலைவர்களுடன் இணக்கமாக செயல்படாமல் அவரது நடவடிக்கைகள் இருந்தன என்பது கவனத்தில் கொள்ள வேண்டும்.
சைவ சமய ஆதீனத்தின் மரபை துறந்தவர் ஆதீனத்தின் தலைவர் என்ற தகுதியை உடனே இழக்கிறார்.
அவரது செயல்பாட்டிற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஆதீனத்தை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பதாக கடிதம் எழுதியுள்ளார். அதற்கு இவருக்கு எந்த தகுதியும் உரிமையும் இல்லை.
ஆதீன செயல்பாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் மகாலிங்கம் அவர்களின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
மேலும் பாரம்பரியமான ஆதீனத்தில் குழப்பம் நிலவும் போது அதனை நிவர்த்தி செய்து அதன் ஆன்மிக செயல்பாடு தொடர்ந்து நடைபெற மற்ற ஆதீன பெரியவர்கள், ஆதீனத்தின் பக்தர்கள், அந்த ஊர் இந்து பெரியோர்கள், இந்து இயக்க தலைவர்கள் ஆகியோர் கலந்து ஆலோசித்து நல்லதொரு வழியை காட்டிட வேண்டும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல இந்து கோவிலில், ஆதீனத்தில் பிரச்சினை என்றால் அரசோ, இந்து சமய அறநிலையத் துறையோ இதில் தலையீடுவது கண்டிக்கத்தக்கது. எப்படி கிறித்தவ முஸ்லிம் மதங்களை சார்ந்த சர்ச் மசூதிகளில் பிரச்சினை ஏற்படும் போது அதில் அரசோ அரசு அதிகாரிகளோ தலையிடுவது இல்லையோ அதுபோல பாரம்பரியமான இந்து சமய முறைகளிலும் அரசு தலையிடக்கூடாது.
தகுதியற்ற முந்தைய ஆதீனமாக இருந்த மகாலிங்கம் கொடுத்த கடிதத்தை அங்கிகாரமாக நினைத்து அரசு ஆதீனத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது.
எனவே இந்து முன்னணி முன்னர் கூறிய ஏற்பாட்டின்படி சூரியனார்கோவில் ஆதீனம் தொடர்ந்து செயல்பட மற்ற பாரம்பரிய ஆதீனங்கள் தீர்வுக்கான ஆலோசித்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்கி கேட்டுக்கொள்கிறோம்.