செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதியைக் கருதி, தங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நடமாடும் ஏடிஎம் பகல் நேரங்களில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதற்கு, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ். ராமன் தெரிவித்தவை…
செங்கோட்டை பிரானூர் பார்டரில் இயங்கும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கும் அதன் மேலாளருக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர், செங்கோட்டை வட்டார ரயில் பயணிகள், செங்கோட்டை ரயில் நிலைய அலுவலர்கள், செங்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு மக்கள் அனைவரும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றனர் .
இத்தரப்பினர் அனைவரும் பயன்பெறும் வண்ணம் – த.மெ. வங்கியின் நடமாடும் ஏடிஎம் வாகனத்தை கடந்த இரண்டு நாட்களாக செங்கோட்டை ரயில் நிலையம் முன்பு கொண்டு வந்து சில மணி நேரங்கள் நிறுத்தி வைத்து உதவி செய்தனர். இதனால் ஏராளமான ரயில் பயணிகள், பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள், டிக்கட் முன்பதிவு செய்ய வந்தவர்கள், அந்தப் பகுதியில் வசிக்கும் அரசு ஓய்வூதியர்கள் அனைவரும் பெரும்பயன் அடைந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் செங்கோட்டை ரயில் நிலையத்தில் இயங்கி வந்த கனரா பாங்க் ஏடிஎம் மூடப்பட்டது. பிறகு பொதுமக்கள் ஏடிஎம் இல்லாது அவதியுற்றனர். அண்மையில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க செய்தித் தொடர்பாளர் ராமன், இந்த டிஎம்பி நடமாடும் ஏடிஎம் பற்றி கேள்விப்பட்டு வங்கி மேலாளரை நேரில் சந்தித்து இந்த நடமாடும் ஏடிஎம்மை செங்கோட்டை ரயில் நிலையத்தில் மதியம் முதல் இரவு வரை நிறுத்துமாறு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் கடிதம் அளித்து வேண்டினார்.
அதனை ஏற்று, வங்கி மேலாளரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கடந்த இரண்டு நாட்களாக மொபைல் ஏடிஎம் வேனை செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்தார். ஆதரவை பொறுத்தே இந்த சேவை தொடரும் என்றும் டிஎம்பி வங்கி மேலாளர் கூறினார். அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்! என்று குறிப்பிட்டார்.