மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாயித்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நரசிங்கம்பட்டியில் இருந்து வாகன பேரணியாக புறப்பட்டு மதுரை தல்லாக்குளத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்து, இன்று நரசிங்கம்பட்டியில் இருந்து பேரணியாகச் சென்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைப்பயணம் ஆகவும் புறப்பட்டுச் சென்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலூர் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக நேற்று கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நரசிங்கம்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக நடைப்பயண பேரணியாக மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக விவசாயிகள் அறிவிப்பு செய்து இருந்தனர்.
இந்நிலையில் நடைபயண பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசார் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கினர்.
அனுமதியைத் தொடர்ந்து அரிட்டாபட்டி அ.வல்லாளப்பட்டி, கல்லம்பட்டி, மாங்குளம், கிடாரிப்பட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நரசிங்கம்பட்டியில் ஒன்று கூடி அங்கிருந்து வாகன அணிவகுப்பு நடத்தி தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக கண்டன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றனர்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேலூர் நகர் பகுதி வெள்ளலூர்நாடு கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, கீழவளவு உள்ளிட்ட மேலூர் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் வணிகர் சங்கங்கள், தினசரி காய்கறி மார்க்கெட் சங்கம், நகை கடை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் கடைகளை அடைத்து அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் நான்கு வழிச்சாலை வழியாக வாகன பேரணியாக வந்து ஒத்தக்கடை மாட்டுத்தாவணி நீதிமன்றம் வழியாக தமுக்கம் மைதானம் வந்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்துக்கு செல்லக்கூடாது என போலீஸார் தடுப்புகளை வைத்திருந்தனர். அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டுச் செல்ல முயன்றபோது, போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேரணி நிறைவடைந்ததை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளக்கூடாது என மாநகர வடக்கு துணை ஆணையர் அனிதா காவல்துறையினருக்கு வலியுறுத்தியிருந்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூர் ,நரசிங்கம்பட்டி கொட்டாம்பட்டி ,சிட்டம்பட்டி, டோல்கேட் ,ஒத்தக்கடை மாட்டுத்தாவணி ,அவுட் போஸ்ட் தல்லாகுளம் ,காந்தி அருங்காட்சியகம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்தனர்.
விவசாயிகளின் பேரணி காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகுநேரம் காத்திருந்து பயணிகள் செல்ல வேண்டியிருந்தது. இதனால் மதுரை திருச்சி சாலையில் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.