
பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரை எங்களிடம் ஒப்படைத்து விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா கறார் பதிலைக் கொடுத்துள்ளது.
காஷ்மீரை வைத்து அரசியல் செய்து வந்த பாகிஸ்தான், தற்போது தன் உள்நாட்டுப் பிரச்னைகளில் சிக்கித் திணறி வருகிறது. ஒரு புறம் பலுசிஸ்தான், பின் பஞ்சாப், சிந்து மாகாணங்கள், மறு புறம் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகள் என பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரிவினைக் கோரிக்கைகள் அந்நாட்டில் பெரும் குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது. இருப்பினும், விடாப்பிடியாக இன்னும் சர்வதேச அரங்கில் காஷ்மீரைப் பற்றிப் பேசுவதையே அரசியலாகக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ஐ.நா., கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பிரச்னையை மீண்டும் எழுப்பியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான வகையில் பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா காஷ்மீர் பெயரைக் குறிப்பிட்டு, அண்டை நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரப் பகுதிகளை காலி செய்துவிட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் தரப்பு கருத்துக்களை முன்வைத்தனர். பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு பிரதமரின் சிறப்பு உதவியாளர் செய்யது தாரிக் பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு – காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆட்சேபனை தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாரதத்தின் சார்பில் பங்கேற்ற ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரீஷ், “இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தேவையற்ற கருத்துக்களை முன்வைக்கிறது. அதன்மூலம் அவர்கள் இந்த மாநாட்டின் மையக்கருத்தை திசை திருப்பப் பார்க்கின்றனர்.
இப்படிப் பேசுவதால், பாகிஸ்தான் உதவியுடன் அரங்கேற்றப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மறைத்துவிட முடியாது. ஜம்மு – காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் அபகரித்துள்ளது. அங்கிருந்து அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.
அன்றும், இன்றும், என்றும் ஜம்மு – காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தேவையின்றி தலையிட வேண்டாம் என அறிவுறுத்துகிறோம் – என்று அவர் பதிலடி கொடுத்தார்.
சர்வதேச கூட்டங்களில் காஷ்மீர் பிரச்னையை மீண்டும் மீண்டும் எழுப்புவதும், அதற்கு தகுந்த பதிலடி வாங்குவதும் பாகிஸ்தானின் வழக்கமான செயலாகவே மாறியுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டு கால அரசியல் நிலைமை போலின்றி, இப்போது பாகிஸ்தானின் உள்நாட்டுப் போர்கள்களால் அது ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரை விட்டு அந்நாடு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது!