
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு மே 3ம் தேதி, நாளை தொடங்கி 5ம் தேதி வரை நடைபெறுகிறது. தருமபுரம் ஆதினத்தின் சார்பில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம், மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரது கார் உளுந்தூர்பேட்டை அருகே ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியது.
அவர் சென்ற காரின் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் கார் சேதமடைந்தது என்றாலும், இந்த விபத்தில் இறையருளால் மதுரை ஆதினம் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.
இந்நிலையில் தருமபுரம் ஆதினம் தமது சமூக வலைதள பக்கத்தில், “மதுரை ஆதினம் கார் விபத்து திட்டமிட்ட சதி” என புகார் தெரிவித்துள்ளார்.
அவர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை வந்துகொண்டிருந்த மதுரையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் காரினை பின்னே வந்து காரில் மோதியுள்ளனர் இது திட்டமிட்ட. சதியாக தெரிகிறது இறையருளால் ஆதீனகர்த்தர் உயிர்தப்பினார் காருக்கு சேதமாயிற்று என்ற விபரமறிந்த குருமணிகள் மதுரையாதீனத்துடன் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்தனர் ஆதீனகர்த்தருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியுள்ளார். – என்று தருமபுரம் ஆதினம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த செய்தி அறிந்து ஹிந்து முன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்ததுடன், அவருக்கு உரிய பாதுகாப்பளிக்க கோரிக்கை வைத்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், மதுரை ஆதீனம் அவர்களின் மீது திட்டமிட்ட கொலை தாக்குதலா? சுவாமிகளுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
இன்று மதியம் தவத்திரு மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த கார் மீது உளுந்தூர்பேட்டை அருகில் விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தினை ஏற்படுத்தியது பழைய வெள்ளை நிற வாகனம் என்றும், அதன் முன், பின் பக்கங்களில் வாகன எண் பிளேட் இல்லை என்று தெரிய வருகிறது. மேலும் காரில் குல்லா போட்ட நபர் முன் இருக்கையில் இருந்துள்ளார். மேலும் வேகமாக வந்த அந்த கார் தடுப்பு பேரீகார்டு அருகில் வந்து திரும்பி தாக்குவதற்கு முயற்சித்துள்ளது.
அதிருஷ்ட வசமாக இறைவன் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் அருளால் சுவாமிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என தவத்திரு திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் கவலை தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற கொடூர சம்பவம் குறித்து சுவாமிகள் மன வருத்தத்துடன் தெளிவான கருத்தினை உறுதியாக தெரிவித்து இருந்தார். எனவே இவற்றை காவல்துறை கவனத்தில் கொண்டு இந்த விபத்து குறித்து முழுமையான தகவலை திரட்ட வேண்டும். மேலும் முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு இட வேண்டும்.
சுவாமிகளுக்கு தக்க பாதுகாப்பை உடனடியாக அளிக்க தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.





