
தென்காசி – புனலூர் இடையே முற்றிலும் விஸ்டாடோம் பெட்டிகளடங்கிய சுற்றுலா ரயிலை குற்றால சீசன் காலத்தில் இயக்க வேண்டி செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்ததாவது…
தென்காசி – புனலூர் இடையில் தினசரி விஸ்டாடோம் கண்ணாடி மேற்கூரை உள்ள சுற்றுலா ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளோம். செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் இன்ஜினியர் முரளி செயலாளர் கிருஷ்ணன் உபதலைவர் ராஜேந்திரராவ் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமேலாளர், ரயில்வே அமைச்சருக்கு 2019லேயே கடிதம் அனுப்பி வேண்டுகோள் வைத்தோம்.
அதில், ஜுன் மாதத்தில் குளுகுளு குற்றால சீசன் தொடங்குகிறது. லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி விரைவார்கள். இந்த சுற்றுலா பயணிகள் செங்கோட்டை புனலூர் ரயில் பாதையில் அமைந்துள்ள இயற்கைக் காட்சிகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் வண்ணமிகு தோற்றங்களையும் பல குகைகளையும் கண்டு மகிழும் வண்ணம் தெற்கு ரயில்வே கண்ணாடி மேற்கூரை உள்ள சுற்றுலாவிற்கென வடிவமைக்கப்பட்ட விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட ஷட்டில் ரயிலை தினமும் தென்காசியிலிருந்து புனலூர் வரை இயக்க வேண்டும்.
தினமும் இரண்டு முறை தென்காசி மற்றும் புனலூரிலிருந்து இந்த ரயில்கள் ஜூன் தொடங்கி நவம்பர் வரை இயங்க வேண்டும். நீலகிரி மலை ரயில் போல இந்த ரயிலும் மிக்க புகழ் பெறும்… என்று குறிப்பிட்டிருந்தனர். தற்போது, ஜூன் மாதம் குற்றால சீஸன் தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் தங்கள் கோரிக்கையை அதிகாரிகளிடம் முன் வைத்துள்ளனர்.





