
விசிஷ்ட அத்வைத தத்துவத்தைப் பரப்பிய மகான் ஸ்ரீ ராமானுஜர் தமிழின் இனிமை கூட்டும் திவ்யப் பிரபந்தங்களை ஆலயங்களில் நிலைபெறச் செய்தார். மக்களிடம் வெகுவாகப் பரப்பினார். திருப்பாவை, திருவாய்மொழி விளக்கவுரைகள் அளித்தார். ஆயினும் அவர் நவரத்தினங்கள் போல் சம்ஸ்க்ருதத்தில் நூல்கள் எழுதினார். அவர் எழுதிய ஒன்பது நூல்களில் முக்கியமானது ‘கத்யத்ரயம்’.
வடமொழியில் பத்யம் என்றால் செய்யுள் என்றும், ‘கத்யம்’ என்றால் உரைநடை என்றும் பொருள். எனவே இது ஓர் உரைநடை நூல். ‘சரணாகதி கத்யம்’, ‘ஸ்ரீரங்க கத்யம்’, ‘வைகுண்ட கத்யம்’ என்ற பெயர்களில் ‘கத்யத்ரயம்’ மூன்று வசன கவிதைகள் எனும் தொகுப்பாக, சரணாகதியின் மேன்மையை விளக்குகின்றன.
ஒரு பங்குனி உத்திர நன்னாளில், திருவரங்கத்தில் பெரிய பிராட்டியாரும் நம்பெருமாளுமாக சேர்த்தியில் சேவை சாதித்த போது, ராமானுஜர், பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பெருமாளிடம் சரண் புகுந்தார். பெருமாள் அதை அங்கீகரித்து, அவருடைய வாழ்நாள் முடியும் வரை ‘த்வய’ மந்திரத்தின் பொருளையே சிந்தித்து திருவரங்கத்தில் வாழும்படி நியமித்தார். இதை ‘சரணாகதி கத்யத்தில்’ விவரித்தார். ராமானுஜர் அவ்வாறு வாழ்கையில், தாம் வைகுந்தத்தில் சென்று அவருக்குச் செய்யும் தொண்டுகளையே இங்கே திருவரங்கநாதனுக்கு செய்ய வேண்டும் என்று ‘ஸ்ரீரங்க கத்யத்தில்’ வேண்டினார்.

அவர் தொண்டுக்கு மகிழ்ந்த அரங்கன், அவர் வைகுந்தத்தில் பெறவிருக்கும் பேறுகளை மனத்தில் தோற்றுவித்தான். அதனால் மகிழ்ச்சியடைந்த ராமானுஜர் தம் ஆனந்தத்தை ‘வைகுந்த கத்யத்தில்’ வெளிப்படுத்தினார். வைகுந்த மாநகரின் சிறப்புகள், அங்கு திருவோலக்கமிருக்கும் வைகுந்தநாதனின் சிறப்புகள்; அவனால் தாம் அங்கே அடையப்போகும் பேறு இவற்றை விவரித்தார்.
இம்மூன்று கத்யங்களும் நம்பெருமாளுக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் இடையே நடந்த ரகசிய உரையாடல்களே. ஆயினும் இந்த ரகசிய உரையாடல்களை, உலகத்தார் உய்யும் பொருட்டு, பகிரங்கமாக வெளியிட்டார் ராமானுஜர். இதுவே ‘கத்யத்ரயம்’. சரணாகதி எனும் நெறியின் எல்லா நுண்ணிய நிலைகளுக்கும் தெளிவான, ஐயந்திரிபற்ற விளக்கமாக ‘கத்யத்ரயம்’ அமைந்துள்ளது. சரணாகதி என்பது, ஒருவர் தன் குறைகள், நிறைவின்மை, இயலாமை முதலியவற்றை வெளிப்படையாக அறிவித்து, சரணம் புகுதல்.
கத்யத்தினைப் படைக்கும் முன், பிராட்டியின் திருவடிகளிலே சரணம் புகுகிறார் ராமானுஜர். ஏன்? பிராட்டி தாயாக இருப்பவள். இறைவனுக்குப் பிரியமானவள். சீற்றத்தை ஆற்றுபவள். பக்தனின் முறையீட்டைக் கேட்டு சமயமறிந்து விண்ணப்பித்து அவன் மனத்தில் இரக்கத்தை ஏற்படுத்துபவள்.
ஞானம், பலம், சக்தி, ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற இந்த ஆறு பண்புகளை உடையவன் பகவான். அவனை நாராயணன் என்ற சொல்லால் விளக்குகிறார்கள். கத்யம் எனும் வசன கவிதை ஆற்றொழுக்குப் போன்ற நடையும், ஓசை நயமும் கொண்டு விளங்குவது. ‘கத்யாம் கவினாம் நிகஷம் வதந்தி – கத்யங்கள் கவிகளுக்கு உரைகல்லாகும்’ எனும் மொழியால் இதன் சிறப்பை உணரலாம்.

சரணாகதி என்பதும் வேதாந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதுதான்! தைத்ரீய உபநிஷத், நாராயண அனுவாகம் 49, 50, 51வது ரிக்குகள்,
1) வாய்மை தவறாமை,
2) உடல் வருத்தி செய்யும் தவம்.
3)வெளிப்புலன்களை தன்வசப்படுத்தும் தவம்,
4) மனத்தை அடக்கி ஒரே நிலைப்படுத்தும் சரமம்,
5) கொடை,
6) அறவழி நடத்தல்,
7) நன் மக்களைப் பெறுதல்,
8) தினசரித் தீயோம்பல்
9) வேள்வி இயற்றல்
10) தேவர்களை பூசித்தல்
11) மனத்தால் பரப்ரஹ்மத்தை தியானித்தல்
12) பரபிரம்மத்தையே ஒரே பற்றாகக் கொண்டு மற்றெல்லாப் பற்றுகளையும் விட்டு, அவனையே நெறியும் இலக்குமாகப் பற்றும் சரணாகதி – என உயர் வரிசைப்படுத்தி ஒன்றுக்கு ஒன்று மேம்பட்டதாகவும், சரணாகதியை இறுதியாகவும் வைத்துப் பேசுகின்றன.
சரணம்- காப்பு, உதவி, இருப்பிடம். ஆகதி- வழி அடைதல். இவற்றால், சரணாகதி என்பது வேதாந்தத்தில் மிக உயர்வானதும் மிக எளிதானதுமாகச் சொல்லப்பட்டிருப்பது தெளிவாகும்.
இறைவன், உயிர்கள் மற்றும் உயிரற்ற பண்டங்களில் உள்ளுறைந்து, அவற்றைத் தன் உடைமைகளாகக் கொண்டு இயக்குகிறான் என்பதை சான்றுகளுடன் நிறுவினார் ராமானுஜர்.
“தனது வினைகளுக்கு ஏற்ப பிறவி எடுத்துள்ள ஜீவாத்மா, இறைவனுக்கு அடிமை; ஜீவாத்மாவின் அறிவும் இறைவனது ஞானமும் கடுகுக்கும் மலைக்கும் ஒத்து வேறுபட்டவை; ஜீவாத்மா ஞானத்தினால் முக்தியை அடைவது இயலாது; இறைவனது மேன்மையை அறிந்து அவனிடம் நீங்கா அன்பு கொண்டு, எண்ணெய் சீராக ஒழுகுதல் போல் இடைவிடா நினைவில் அவனை நிறுத்தலாகிற உபாஸனம் அல்லது பக்தி, அதன் மூலமே ஜீவாத்மா அவனை அடைய இயலும். பக்தி என்பது ஜீவாத்மா தனக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஞானத்தால் அவனிடம் மாறா விருப்பத்துடன் செயல்படுதல் ஆகும்” என்றார் ராமானுஜர்.
பக்திக்கு, கர்ம வழியிலும் ஞான வழியிலும் தேர்ச்சி வேண்டும்; பக்தி கடைபிடிப்பதற்கு கடினமாகவும் இருக்கும். மேலும் இந்த ஆத்மா அனுபவிக்க வேண்டிய வினைகள் யாவையும் அனுபவித்து முடித்த பிறகுதான் (அதற்கு பல பிறவிகளும் ஆகலாம் ) முக்தி கிடைக்கும். முக்தி அடைதல் இடையில் தடைபட்டுப் போகும் வாய்ப்பும் உண்டு.எனவே கர்ம – ஞான – பக்தி நெறிகளால் இப்பிறவிலேயே முக்தி நிச்சயம் இல்லை என்பதாலும், இந்த நெறிகளைக் கடைப்பிடிக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதாலும், செயலும் ஞானமும் பக்தியும் பொதிந்த சரணாகதியை ராமானுஜர் வகுத்துத் தந்தார்.சரணாகதி, பக்தியினும் மேம்பட்டிருப்பதை இந்த ஒப்புநோக்கு விளக்கும்.
பக்தி
- தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டவர்களுக்கே இயலும்.
- கடினமான செய்முறை உடையது.
- ஓர் ஆத்மா அனுபவித்து வரவேண்டிய வினைகள் (ப்ராரப்த கர்மா) முடியும்போதுதான் முக்தி கிட்டும். இதற்கு, பக்தி வழியிலுமே ஒன்றுக்கு மேற்பட்ட பிறவிகளும் பிடிக்கலாம்.
- இடையீடுகள் ஏற்பட வழி உண்டு.
- இது தன்முயற்சியை மையமாகக் கொண்டது. அதனால் ஆத்மாவின் இயல்பான ‘பரமாத்மாவுக்கு அடிமை நிலை’ மற்றும் இறைவனின் ஆளுமை நிலை இவற்றுடன் வேறுபடும்.
- எனவே இறைவன் திருவுள்ளத்திற்கு அவ்வளவு உகப்பாய் இராது.
பிரபத்தி அல்லது சரணாகதி
- இதற்கெனத் தனித்தகுதிகள் தேட வேண்டாம். இருக்கும் நிலையிலேயே சரணாகதியை யாரும் செய்யலாம்.
- செய்ய எளிது.
- இப்பிறப்பிலேயே, இவ்வுடல் முடிவிலேயே, முக்தி கிட்டும்.
- அவனைச் சரணம் அடைந்தால், நம் ஆத்மாவின் முக்தி அவனது பொறுப்பு ஆகும். அதனால் இடையூறு ஏற்பட வழியே இல்லை.
- இது அவன் விருப்பத்தாலேயே கிட்டும் என்பதால் ஆத்மாவின் அடிமை நிலை மற்றும் இறைவனின் ஆளுமை இயல்புகளுக்கு ஒத்திருக்கும்.
- அதனால் இறைவன் திருவுள்ளத்திற்கு உகப்பாயிருக்கும். இந்த சரணாகதி தான் வேதத்தில் விதிக்கப்பட்டுள்ள ‘ந்யாஸ வித்யை’ என்றும், அதை வலியுறுத்தவே இதிஹாஸங்களான ராமாயணம், மகாபாரதம் எழுந்துள்ளன என்றும் பகவத் ராமானுஜர் ஐயந்திரிபற நிலைநாட்டினார். *
- ஞான ஒளி மே 2025 – ஆன்மிக இதழில் வெளியான கட்டுரை





