
சீன அரசின் பிரசார ஊதுகுழலாகச் செயல்படும் சீனா Xinhua செய்திகளின் X தளப் பக்கத்தை இந்தியா தடை செய்தது. சீனா சின்ஹுவா செய்தி பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்கள், போலி செய்திகள் மற்றும் பிரசாரங்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸும் இவ்வாறு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் குளோபல் டைம்ஸுக்குப் பிறகு இரண்டாவது பெரிய சீன CCP ஊடகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
சீன ஊடகத்தின் எக்ஸ் தளப் பக்கம் மட்டுமல்லாது, துருக்கிய அரசாங்கத்தால் நிதி உதவி செய்யப்பட்டு அதன் மூலம் நடத்தப்பட்டு வரும் டிஆர்டி வேர்ல்ட் TRT World சர்வதேச செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கமும் இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பொது கண்டனத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கை குறித்த ஒரு நேரடி எக்ஸ் தள இடுகையின் போது, குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்தது.
இந்திய ஆயுதப் படைகள் சந்தித்ததாகக் கூறப்படும் இழப்புகள் தொடர்பான ஆதாரமற்ற கூற்றுக்களை, பாகிஸ்தானுக்கு ஆதரவான பல சமூக ஊடகக் கணக்குகள் பரப்பி வருவதாக தூதரகம் ஒரு தொடர்ச்சியான பதிவில் செய்தியை விரிவாகக் குறிப்பிட்டது.
காண்க: பொய்களைப் பரப்பலாமா? ஊடகத்தின் செயல் அதுதானா? சீன ஊடகத்துக்கு விடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்!
ஆபரேஷன் சிந்தூர் நிகழ்வின் பின்னணியில், பாகிஸ்தானுக்கு ஆதரவான பல அமைப்புகள், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியில், ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருகின்றன. ஊடகங்கள் ஆதாரங்களைச் சரிபார்க்காமல் இதுபோன்ற தகவல்களைப் பகிரும்போது, அது பொறுப்பு மற்றும் பத்திரிகை நெறிமுறைகளில் கடுமையான குறைபாட்டை பிரதிபலிக்கிறது” என்று தூதரகத்தின் பதிவில் கூறப்பட்டது.
பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை சரிபார்ப்புப் பிரிவு, இந்திய விரோதப் போக்கு தீவிரமடைந்ததிலிருந்து தவறான தகவல்களைத் தீவிரமாகக் கண்டறிந்து வருகிறது. பல தவறான காட்சிகள் மற்றும் விவரிப்புகள் மறுசுற்றுக்கு விடப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறியப்பட்டன, அவற்றில் பல பழைய நிகழ்வுகளிலிருந்து எடுக்கப்பட்டவை அல்லது முற்றிலும் புனையப்பட்டவையாக இருந்தன.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை தனது ஒரு பகுதியாகக் கூறி வரும் சீனா, வடகிழக்கு மாநிலத்திற்குள் பல இடங்களின் பெயர்களைக் கொண்ட வரைபடங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களின் 30 புதிய பெயர்களைக் கொண்ட பட்டியலை சீனா வெளியிட்டது, அதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது.
அருணாச்சல பிரதேசத்தை, ஜாங்னான் என்று பெயரிட்டு சீனா அழைத்து வருகிறது. அங்குள்ள ஆறு இடங்களுக்கு, 2017ல் புதிய பெயரை சூட்டியது. அதைத் தொடர்ந்து, 2021ல் 15 இடங்கள், 2023ல் 11 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது. தற்போது மீண்டும் அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து வீணான மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, அத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. பெயரை மாற்றினாலும், உண்மையான யதார்த்தத்தை சீனா மாற்ற முடியாது – என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அது தொட்ர்ந்த பின்னணியில், இப்போது சீன ஊடகங்களின் சமூகத் தளக் கணக்குகளை இந்தியாவில் தடை செய்துள்ளது இந்திய அரசு. ஆனால், இதே சீன ஊடகத்தின் பொய்ப் பிரசாரங்களை மேற்கோளிட்டு பிரசாரம் செய்யும் இந்திய ஊடகங்களின் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்றும், அவ்வாறு பொய்களைப் பரப்பும் துவேஷ ஊடகங்களின் மீது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை குறைந்த பட்சம் விளக்கம் கேட்டு அறிக்கையாவது அனுப்பியதா என்றும் கேள்விகள் முன்வைக்கப் படுகின்றன.





