
திமுகவின் அநாகரிக பேச்சு மற்றும் ஜாதிய வன்மத்திற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்து உள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஜாதி ரீதியாக வசை பாடுவதை திமுகவினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்! என்று இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கை…
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவுக்கு தடைவிதித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதை தாங்கிக் கொள்ள முடியாத திமுகவினர், நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகிய நீதிபதிகளை ஜாதி ரீதியாக தாக்கிப் பேசி வருகின்றனர். இவர்களெல்லாம் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இது ஒரு பிராமண நீதிமன்றம் என்றும் வசைபாடி வருகின்றனர்.
நீதிமன்றம் என்பது நமது ஜனநாயக நாட்டின் இறையாண்மையைக் காக்கும் இடமாகும். பாரபட்சம் இல்லாமல் நீதி வழங்கி சட்டத்தை பாதுகாக்கும் நீதிபதிகளை இவ்வாறு பேசுவது கண்டனத்துக்குரியதாகும்.
தி.மு.க என்ன நினைக்கிறதோ ன, எதற்காக வழக்கு தொடுத்து இருக்கிறதோ அது அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு எழுதப்பட வேண்டும் என்று நீதிமன்றத்திடம் எதிர்பார்க்கின்றனர்.
திமுக பல வழக்குகளை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தொடுத்துள்ளது. திமுகவிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் இது திராவிடத்திற்குக் கிடைத்த வெற்றி, சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி என்று குதூகளிப்பார்கள்.
அவர்களுக்கு எதிரான தீர்ப்பு வரும் போது ஜாதியை கையில் எடுத்து
தங்களின் வக்கிர புத்தியைக் காட்டுவார்கள்.
நமது ஜனநாயகத்தையும், இறையாண்மையையும், நமது பண்பாடு – கலாச்சாரங்களையும்
தி.மு.க பலமுறை கொச்சைப்படுத்தி இருக்கிறதை பட்டியலிட முடியும்.
உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதித்துறையையும் தி.மு.கவினர் விட்டு வைப்பதில்லை. யு.ஜி.சி எனப்படும்
பல்கலைக்கழக மானிய குழுவிடமிருந்து நிதி பெற்றே அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்குகின்றன.
இதில் மாநில அரசின் நிதி பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவு தான்.
எனவே யு.ஜி.சி மற்றும் கவர்னர் அனுமதி இன்றி பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க சட்டத்தில் வழியில்லை. இதை தெளிவாக தெரிந்து கொண்டே தி.மு.க காய் நகர்த்துகிறது.
சமூக நீதி பேசும் இவர்கள், பட்டியல் இன சமூகத்திற்கு தி.மு.க போட்ட பிச்சை நீதிபதி பதவி என்று கூட பேசினார்கள்.
எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஜாதி ரீதியாக, மொழி ரீதியாக பிரிவினையை உண்டாக்கி தரம் தாழ்ந்த கருத்துக்களை தி.மு.க வெளிப்படுத்தும்.
இதே தீர்ப்பை பிராமணர் அல்லாத
பிற நீதிபதிகள் வழங்கி இருந்தால்
திமுக அவர்களின் ஜாதியைச் சொல்லி
பேசி இருக்குமா?
ஆபாசப் பேச்சும், தனிநபரை மோசமாக தாக்கிப் பேசுவதும் திமுகவின் இரட்டை குழல் துப்பாக்கிகள்.
அங்கே தொட்டு இங்கே தொட்டு இன்று நீதிபதிகளையே கொச்சைப்படுத்தி பேசும் செயலை திமுக உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கலாமே தவிர நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பது போன்றது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஜாதி பாகுபாடு கற்பித்து கருத்து தெரிவித்த தி.மு.கவினரை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.





