
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர பயனர் கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னிதி மில் ஜூன் 28 இன்று பிரசித்தி பெற்ற ஆனி சுவாதி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான செப்பு தேரோட்டம் ஜூலை 14 அன்று நடைபெறும். இந்த உற்சவம் பெரியாழ்வாரின் அவதார திருநாளை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய திருவடியான கருடாழ்வாரின் அம்சமாய் விஷ்ணு சித்தர் அவதரித்தார். அவர் பெருமாளுக்கு கண்ணேறு கழிப்பதற்காக திருப்பல்லாண்டு பாடியதால் பெரியாழ்வார் என அழைக்கப்படுகிறார். இவர் ஆண்டாளை மகளாக வளர்த்து ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து வைத்தார். பெரியாழ்வாரே தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ஶ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை அமைத்தார் என்பது வரலாறு.
ஶ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் அவதார தினமான திரு ஆனி சுவாதி உற்சவ விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திரு ஆனி சுவாதி உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது. முக்கிய விழாவாக திருவேங்கடமுடையான் சந்நிதியில் ஆண்டாள் திருக்கோலமும், வானமாமலை ஜீயர் மண்டபத்தில் கருட சேவையும், தவழும் கிருஷ்ணர் திருக்கோலமும் நடைபெறுவது சிறப்பு ஆகும்.முக்கிய விழாவாக ஜூலை 14 ஆம் தேதி காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டம் நடைபெறுகிறது.
பெரியாழ்வாரின் அவதார திருநாளான ஆனி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு இந்த உற்சவத்தில் பெரியாழ்வார், ஆண்டாள், மற்றும் பிற தெய்வங்கள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள்.





