
இன்று தூத்துக்குடியில் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் சிறப்பு ரயில்களாக இயங்கும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருவனந்தபுரம் வடக்கு தாம்பரம் சிறப்பு ரயில்களை தினசரி ரயில்களாக நிரந்தரமாக இயக்க அறிவிப்பாரா என தென்மாவட்ட ரயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து, ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார்.
தூத்துக்குடியில் சர்வதேச தரத்தில் ரூ.452 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானத்தில் இன்று இரவு 7.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பிரதமர் வருகிறார். அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த பின்னர், செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுகிறார்.
பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, தமிழகத்தில் ரயில்வே துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்பிலான பணிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,557 கோடி மதிப்பிலான பணிகளை திறந்து வைக்கிறார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் 3 மற்றும் 4-வது உலையில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கிவைத்துப் பேசுகிறார்.
இந்த விழாவில் பிரதமர் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைப்பாரா என தென் மாவட்ட வரை பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பல ஆண்டுகளாக வாரம் ஒரு முறை சிறப்பு ரயிலாக இயங்கும் விரைவு ரயில் தினசரி ரயிலாக நிரந்தரமாக இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம் வடக்கு முதல் தாம்பரம் வரை சிறப்பு ரயிலாக முதலில் வாரம் இரு முறை இயக்கப்பட்டு பிறகு வாரம் ஒரு நாளாக இயக்கப்பட்ட ரயில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கேரளா தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்த இந்த ரயில் நிரந்தரமாக தினசரி ரயிலாக இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த இரு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் வர்த்தகர்கள் பொதுமக்கள் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் கொல்லம் திருநெல்வேலி கொல்லம் மதுரை இடையே புதிய மெமோ ரயில்களையும் இயக்கவும் கோட்டயத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் வழியாக ஈரோடு இயக்க உள்ள ரயிலை விரைவில் அறிவிக்கவும், ஏற்கனவே மீட்டர் கேஜ் வழித்தடத்தில் இயங்கிய கொல்லம் செங்கோட்டை கோயம்புத்தூர் தினசரி ரயிலை மீண்டும் இயக்கவும் ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தப் புதிய ரயில்களில் ஏதாவது ஒரு சில ரயில்கள் ஆவது இயக்கப்பட பிரதமர் முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.





