
நாளை திங்கட்கிழமை திருஆடிபூரம் நாளில் தேரில் பவனி வந்து தரிசனம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம், மங்களப் பொருட்கள் மதுரை அழகர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தது.நாளை திங்கட்கிழமை ஒன்பதாம் திருநாளாம் .
காலை 2:00 மணி க்கு ஏகாந்த திருமஞ்சனம்
காலை புறப்பாடு: தனித்தனி தோளுக்கினியான்களில் காலை 5.00 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கடக லக்னத்தில் திருத்தேர் எழுந்தருளலும்
திருவாடிப்பூரத் தேரோட்டம் காலை 9.10 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுத்தலுடன் துவங்குகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஆடிப்பூர தேர் திருவிழா 28ஆம் தேதி காலை சிறப்பாக நடைபெறுகிறது. முன்னதாக சனிக்கிழமை இரவு சயன கோலத்தில் ஆண்டாள் காட்சிதரும் நிகழ்வு கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் மங்களப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்தன்று நடைபெறும் தேர் திருவிழாவின் போது ஆண்டாளுக்கு மரியாதையாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருள்கள் கொண்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்களப் பொருட்களை கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அதிகாரியும் இணை ஆணையுருயமான சிவ ராம்குமார் தலைமையில் குழுவினர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் மாட வீதிகள் வழியே மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதனை ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரையம்மாள் பெற்றுக் கொண்டார். அப்பொழுது ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலை மதுரை அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மரியாதைகளை கள்ளழகர் திருக்கோவில் அதிகாரிகள் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.





