
பாரதப் பிரதமர் நரேந்திர மோதி 27.07.2025 அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆற்றிய உரை…
தமிழாக்கம் / தமிழ்க் குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்
வணக்கம் சோழமண்டலம்! நம: சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள் வாழ்க.
நண்பர்களே, சிவதரிசனத்தால் அற்புதமான சக்தி….. இளையராஜா அவர்களின் இசை….. ஓதுவார்தம் மந்திர உச்சாடனம்… உண்மையிலேயே…. இந்த ஆன்மீக அனுபவம் என் ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது.
நண்பர்களே, பவித்திரமான பருவமழைக்காலம்….. அதோடு கூட, பிருஹதேஸ்வரர் சிவாலய நிர்மாணம் தொடங்கி, ஓராயிரம் ஆண்டுகள் வரலாற்றுப்பூர்வமான சந்தர்ப்பம்…….. இப்படிப்பட்ட அற்புதமான வேளையிலே, சிவனவன் பிருஹதேஸ்வரனின் பாதாரவிந்தங்களிலே சிரம் தாழ்த்த, அவரை வழிபாடு செய்யக்கூடிய பெரும்பேறு எனக்குக் கிடைத்தது.
நான் இந்த சரித்திர பூர்வமான ஆலயத்திலே, 140 கோடி நாட்டுமக்களின் நலனுக்காகவும், பாரதநாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் என் வேண்டுதல்களை முன்வைத்தேன். என் விருப்பமெல்லாம் – இறைவன் சிவனாரின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்…….. நம: பார்வதி பதயே, ஹர ஹர மஹாதேவ!!
நண்பர்களே, சின்மயா மிஷனுடைய முயற்சிகள் காரணமாக, தமிழ் மொழியில் பகவத் கீதை இசைத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பும் இங்கு கிடைத்தது. இந்த முயற்சியும் கூட, நமது பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் நமது மனவுறுதிக்கு, சக்திகூட்டுகிறது. இந்த முயற்சியோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, சோழ அரசர்கள் தங்களுடைய அரசியல் மற்றும் வியாபாரத் தொடர்புகளின் விரிவாக்கத்தை, இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை செய்திருந்தார்கள். நான் நேற்றுத்தான் மாலத்தீவுகளிலிருந்து திரும்பி வந்தேன், இன்று தமிழ்நாட்டிலே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.
நண்பர்களே, சிவனை வழிபாடு செய்பவனும், சிவபெருமானிலேயே கலந்து விடுகிறான், அவரைப் போலவே அழிவற்றவனாகி விடுகிறான் என்று நமது சாத்திரங்கள் ஓங்கி உரைக்கின்றன. ஆகையால் தான் சிவபெருமானிடத்திலே ஆழ்ந்த பக்தி கொண்ட பாரதத்தின் சோழர்களின் பாரம்பரியமும் கூட இன்று அமரத்துவம் அடைந்து விட்டது.
இராஜராஜ சோழன்…….இராஜேந்திர சோழன்….. இந்தப் பெயர்கள், பாரதத்தின் அடையாளங்கள், கௌரவத்தின் இணைச்சொல். சோழப்பேரரசு…. சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு, மற்றும் பாரம்பரியம்….. இவை பாரதத்தின் மெய்யான வல்லமையின், இயலாற்றலின் பிரகடனம்.
பாரதத்தின் அந்தக் கனவு அளிக்கும் உத்வேகத்தால் உந்தப்பட்டு, இன்று நாம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகின்றோம். நான் இந்த உள்ளெழுச்சி காரணமாக, பெரும் பராக்கிரமன் இராஜேந்திர சோழனை வழுத்துகிறேன்.
கடந்த சில தினங்களில் நீங்கள் அனைவரும் ஆடி திருவாதிரை உற்சவத்தைக் கொண்டாடினீர்கள். இன்று அதன் நிறைவு, இந்த மகத்தான நிகழ்ச்சி வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் இதற்குத் தோள்கொடுத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம், பாரதத்தின் பொற்காலங்களின் ஒன்றாக இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். இந்த காலகட்டம், அவர்களுடைய போர்த்திறன் – வலிமையால் அளக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலேயும் கூட பாரதத்தின் பாரம்பரியத்தை, சோழ சாம்ராஜ்ஜியம் முன்னெடுத்துச் சென்றது. வரலாற்று ஆய்வாளர்கள், மக்களாட்சி என்றால், பிரிட்டனுடைய மேக்னா கார்டாவைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுவார்கள். ஆனால் பல நூற்றாண்டுகள் முன்பாகவே, சோழ சாம்ராஜ்ஜியத்தில் குடவோலை முறை வாயிலாக, ஜனநாயக வழிமுறைகள்படி, தேர்தல்கள் நடந்தன.
இன்று உலகெங்கிலும் நீர் மேலாண்மை, சூழலியல் பாதுகாப்பு ஆகியவை பற்றிய விவாதங்கள் நடக்கின்றன. நமது முன்னோர்களோ, மிகப் பழமையான காலத்திலேயே கூட இவற்றின் மகத்துவத்தை நன்கு அறிந்திருந்தார்கள். மற்ற இடங்களிலிருந்து தங்கம்-வெள்ளி அல்லது பசுக்களைக் கவர்ந்துவந்த பல அரசர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இராஜேந்திர சோழனுடைய அடையாளமோ, புனித கங்கை நீரைக் கொண்டு வந்ததோடு இருக்கிறது.
இராஜேந்திர சோழன் வடபாரதத்திலிருந்து புனித கங்கை நீரைக் கொண்டு வந்து, தெற்கிலே நிறுவினான். கங்கா ஜலம்யம் ஜயஸ்தம்பம். இந்த நீரைக் கொண்டு இங்கே சோழகங்க ஏரியிலே இட்டு நிரப்பினான். இது இன்று பொன்னேரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தை நிர்மாணமும் செய்தான். இந்த ஆலயம், இன்றும்கூட, உலகின் ஒரு கட்டிடவியல் அற்புதமாகத் திகழ்கிறது. அன்னை காவிரி பெருகிப்பாயும் இந்த பூமியிலே, அன்னை கங்கைக்கு திருவிழா எடுக்கப்படுவது என்பதும் கூட, சோழ சாம்ராஜ்ஜியத்தின் நற்கொடையாகும்.
அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பின்புலத்தின் நினைவிலே, மீண்டும் ஒருமுறை, கங்கை நீரை, காசியிலிருந்து இங்கே கொண்டு வந்திருப்பது எனக்கு மிகுந்த உவகையை அளிக்கிறது. தற்போது இங்கே நெறிப்படி அனுஷ்டானங்கள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன. நான் காசியின் மக்கள் பிரதிநிதி, கங்கை அன்னையிடம் எனக்கு ஆன்மரீதியிலான அன்பு உள்ளது. சோழ அரசர்களின் இந்தச் செயல்…… அதோடு இணைந்த இந்த ஏற்பாடு….. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பெருவேள்வியைப் போன்றது இது.
சகோதர சகோதரிகளே, சோழ அரசர்கள் பாரதத்தை கலாச்சார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள். இன்று நம்முடைய அரசாங்கம், சோழர்களுடைய இதே கருத்துக்களை-எண்ணங்களை முன்னெடுத்துச் செல்கின்றது. நாங்கள் காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற ஏற்பாடுகள் வாயிலாக, ஒற்றுமையின், ஒருமைப்பாட்டின் பல நூற்றாண்டுக்காலப் பழமையான கோட்பாடுகளை பலப்படுத்தி வருகின்றோம். கங்கைகொண்ட சோழபுரம் போன்ற தமிழகத்தின் பண்டைய ஆலயங்களையும் கூட இந்திய தொல்லியல் ஆய்வகம் வாயிலாக பரமரிக்கப்பட்டு வருகின்றன.
தேசத்தின் புதிய நாடாளுமன்றம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட போது, நமது சிவாதீனங்கள்-புனிதர்கள், அந்த நிகழ்ச்சியின் ஆன்மீகத் தலைமையை ஏற்றார்கள். தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனிதமன செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. அந்தக் கணங்களை நான் இன்று நினைத்துப் பார்த்தால் கூட, என் நெஞ்சம் பெருமிதத்தில் பொங்குகிறது.
நண்பர்களே, நான் இப்போது தான் சிதம்பரம் நடராஜா ஆலயத்தின் சில தீக்ஷிதர்களைச் சந்தித்தேன். சிவபெருமான் நடராஜராக வழிபடக்கூடிய அந்த திவ்வியமான ஆலயத்தின் பவித்திரமான பிரசாதத்தை அவர்கள் எனக்கு அளித்தார்கள். நடராஜரின் இந்த சொரூபம், இது நமது தத்துவம், அறிவியல் வேர்கள் ஆகியவற்றின் அடையாளம்.
நடராஜ ஸ்வாமியின் இதே போன்ற ஆனந்த தாண்டவ மூர்த்தி, தில்லியின் பாரத் மண்டபத்தின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதே பாரத் மண்டபத்தில், ஜி-20யின் போது, உலகெங்கிலுமிருந்தும் உலகமகா தலைவர்கள் எல்லாம் குழுமினார்கள்.
நமது சைவ பாரம்பரியம், பாரதத்தின் கலாச்சார நிர்மாணத்திலே மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியிருக்கிறது. சோழப் பேரரசர்கள், இந்த நிர்மாணத்தின் முக்கியமான சிற்பிகளாக விளங்கினார்கள். ஆகையால் தான் இன்றும் கூட சைவ பாரம்பரியத்தின் உயிர்ப்புடைய மையங்களில், தமிழ்நாடு மிகவும் முக்கியமானது.
பெருமைமிகு நாயன்மார் புனிதர்களின் சீர்மரபு…. அவர்கள் யாத்த பக்திக் காப்பியங்கள்…. தமிழ் இலக்கியம்……. நமது போற்றுதலுக்குரிய ஆதீனங்களின் பங்களிப்பு…… அவர்கள் சமூக மற்றும் ஆன்மீகக் களங்களில் ஒரு9 புதிய யுகத்திற்குப் பிறப்பளித்திருக்கிறார்கள்.
நண்பர்களே, இன்று உலகம் நிலையில்லாத்தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்றா பிரச்சனைகளில் உழன்று வரும் வேளையிலே….. சைவ சித்தாந்தம் நமக்கு தீர்வளிக்கும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது.
நீங்கள் பாருங்கள்…… அன்பே சிவம் என்றார் சித்தர் திருமூலர். இன்று இந்தக் கோட்பாட்டை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால், பெரும்பாலான சங்கடங்கள் தாமாகவே தீர்ந்து போய்விடும். இந்த எண்ணத்தைத் தான் பாரதம் இன்று ஒரே உலக்ம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்றா வகையிலே முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
நண்பர்களே, இன்று பாரதம், வளர்ச்சியோடு கூடவே மரபும் என்ற மந்திரத்தை அட்யொற்றிப் பயணித்து வருகிறது. இன்றைய பாரதம், தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் நாம் தேசத்தின் பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாக்கும் பணியில் மிகுந்த உருத்தோடும், கருத்தோடும் பணியாற்றி வருகின்றது. தேசத்தின் பண்டைய சிலைகள் மற்றும் கலைச்சின்னங்கள்…. இவை களவாடப்பட்டு, அயல்நாடுகளில் விற்கப்பட்டு விட்டன, இவற்றை நாங்கள் மீட்டெடுத்துக் கொண்டு வருகிறோம்.
2014ஆம் ஆண்டிற்குப் பிறகு, 600க்கும் அதிகமான தொன்மையான கலைப்படைப்புகள், உலகின் பல்வேறு தேசங்களிலிருந்தும் பாரதம் வந்தன. இவற்றில் 36 கலைப்பொருட்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இன்று நடராஜர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நந்திகேஸ்வரர், உமா பரமேஸ்வரி, பார்வதி, சம்பந்தர்….. இப்படி பல மகத்துவம் வாய்ந்த பாரம்பரியங்கள், இப்போது இந்த பூமியிலே மீண்டும் அழகு சேர்த்து வருகின்றன.
நண்பர்களே, நமது மரபும், சைவ தத்துவத்தின் முத்திரையும், பாரதம் வரை மட்டுமோ, அல்லது இந்த பூமியுடனோ மட்டும் நின்று போய் விடவில்லை. பாரதம் நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் தேசம் ஆனது……….. அப்போது நாம் நிலவின் அந்த இடத்திற்கு சிவசக்தி என்று பெயரிட்டோம். நிலவின் அந்த முக்கியமான பாகம், இனி சிவசக்தி என்ற பெயரால் அடையாளம் காணப்படும்.
நண்பர்களே, எந்த பொருளாதார, போர்த்திற உன்னத உயரங்களை பாரதம் தொட்டதோ, அவை இன்றும்கூட நமது கருத்தூக்கங்கள். இராஜராஜ சோழன் ஒரு சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். இராஜேந்திர சோழன் இதை மேலும் உறுதிப்படுத்தினார்.
அவருடைய காலகட்டத்தில் பல்வேறு நிர்வாக மேம்பாடுகள் புரியப்பட்டன. அவர் உள்ளூர் நிர்வாக அமைப்பினை சக்தியுடையதாக ஆக்கினார். ஒரு பலமான நிதிவழிமுறையை அமல் செய்தார். வியாபார உயர்வு…. கடல்மார்க்கங்களின் பயன்பாடு…… கலை மற்றும் கலாச்சாரத்தின் பிரச்சாரம்…….. பாரதம் அனைத்துத் திசைகளிலும் விரைவாக முன்னேறிக் கொண்டிருந்தது.
நண்பர்களே, சோழ சாம்ராஜ்ஜியம், புதிய பாரதத்தின் நிர்மாணத்திற்கான, பழமையான சாலை வரைபடம் போன்றது. நாம் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் ஒற்றுமையின் மீது அழுத்தம் அளிக்க வேண்டும். நாம் நமது கடற்படையினை, நமது பாதுகாப்புப் படைகளை பலமுள்ளவையாக ஆக்க வேண்டும். நாம் புதிய சந்தர்ப்பங்களைத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் இவை அனைத்தோடு கூடவே, நமது விழுமியங்களையும் நன்கு பாதுகாத்துப் பேண வேண்டும். இன்று தேசம், இந்த உத்வேகத்தைத் தாங்கி முன்னேறி வருகின்றது என்பது எனக்கு பேருவகையை அளிக்கிறது.
நண்பர்களே, இன்றைய பாரதம், தனது பாதுகாப்பை அனைத்தையும்விடப் பெரியதாகக் கருதுகிறது. யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால், பாரதம் எப்படிப்பட்ட பதிலடியைக் கொடுக்கும் என்பதை, ஆப்பரேஷன் சிந்தூரின் போது உலகமே கவனித்தது. பாரதத்தின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்தவொரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது என்பதை ஆப்பரேஷன் சிந்தூர் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
நண்பர்களே, இராஜேந்திர சோழன், கங்கைகொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்தாலும், அதனுடைய கோபுரத்தை, தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் ஆலய கோபுரத்தை விடக் குறைவானதாக வைத்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தனது தந்தையாரால் கட்டியெழுப்பப்பட்ட ஆலயத்தின் கோபுரத்தை அனைத்தையும் விட உயரமானதாக தக்கவைக்கவே அவர் விரும்பினார். தனது மகத்துவத்திற்கு இடையேயும் கூட, இராஜேந்திர சோழன் மிகுந்த பணிவை வெளிப்படுத்தினார்.
இன்றைய புதிய பாரதம், இதே உணர்வின் ஆதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாம் தொடர்ந்து பலமடைந்து கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட, நமது உணர்வுகள் உலகத்தின் நண்பனுடையவை, உலகநலனுக்கானவை.
நண்பர்களே, நம்முடைய பாரம்பரியத்தின் மீது பெருமித உணர்வை முன்னெடுக்கும் வேளையில், இன்று இங்கு மேலும் ஒரு உறுதிப்பாட்டை நான் எடுத்துக் கொள்கிறேன். வரவிருக்கும் காலத்தில் நாம் தமிழ்நாட்டிலே இராஜராஜ சோழன், அவருடைய மகனும், மகத்தன ஆட்சியாளருமான முதலாம் இராஜேந்திர சோழனுடைய பிரமாதமான உருவச்சிலையை நிர்மாணம் செய்வோம். இந்த உருவச்சிலைகள், நமது வரலாற்று விழிப்புணர்வின் நவீன கொடிமரங்களாகும்.
நண்பர்களே, இன்று டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுதினம். வளர்ச்சியடைந்த பாரதத்திற்குத் தலைமை தாங்க, டாக்டர் கலம்….. சோழப் பேரரசர்களைப் போன்று, இலட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை. சக்தியும், பக்தியும் நிறைந்த இப்படிப்பட்ட இளைஞர்கள், 140 கோடி நாட்டுமக்களின் கனவுகளை நிறைவேற்றுவார்கள். நாமனைவரும் இணைந்து, ஒரே பாரதம், உன்னத பாரதத்திற்கான உறுதிப்பாட்டை முன்னெடுத்துச் செல்வோம். இந்த உணர்வோடு கூடவே, மீண்டுமொருமுறை, இன்று இந்த வேளையிலே உங்களனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலப்பல நன்றிகள்.





