கேரளாவில் பிரசித்தி பெற்ற மலையாள புத்தாண்டு சிம்மம் ஆவணி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை மலையாள புத்தாண்டு வழிபாடுகள் பூஜைகள் அபிஷேகம் ஆராதனை விமர்சையாக நடைபெறும்.சபரிமலை புதிய தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார்.இவர் ஒரு ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான பூஜை வழிபாடுகள் நடத்துவார்.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது.இது போல் மலையாள புத்தாண்டு கேரளாவில் ஆவணி சிம்மம் முதல்நாள் அதி விமர்சையாக கொண்டாடப்படும்.அதன்படி மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார். அவரது முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். பக்தர்களுக்கு பஷ்ப பிரசாதம் வழங்கப்படும்.தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். மேலும் 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை ஆவணி முதல் நாள் மலையாளிகள் மலையாள புத்தாண்டாக கொண்டாடுவார்கள் இதற்காக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏராளமான மலையாளிகள் இருமுடி கட்டி சபரிமலைக்கு அதிகளவில் வந்து ஐயப்பனுக்கு பல்வேறு முயற்சிகள் செலுத்தி பூஜை வழிபாடுகள் நடத்தி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்





