
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) சர்சங்கசாலக் (தலைவர்) மோகன் பாகவத் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், இந்தியாவில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் கஸ்வா-இ-ஹிந்தை எதிர்க்கிறார்கள், ஆனால் சமூகத்திற்குள் உள்ள அடிப்படைவாதிகளின் ஒரு பிரிவை ஒப்புக்கொள்கிறார்கள் என்று கூறினார்.
பெங்களூரில் ஆர்எஸ்எஸ்., நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 100 Years of Sangh Journey: New Horizons’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மோகன் பாகவத் பேசினார். இந்த விரிவுரை அமர்வின் போது, ஆர்.எஸ்.எஸ் குறித்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது…
நாட்டில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் ‘லவ் ஜிஹாத்’ அல்லது கஸ்வா-இ-ஹிந்தை (இந்தியாவிற்கு எதிரான புனிதப் போர் என்று கூறப்படுவது) அங்கீகரிக்கவில்லை, ஆனால் சமூகத்தில் கணிசமான ‘கட்டர்பந்திகள்’ (அடிப்படைவாதிகள்) உள்ளனர். “நல்லவர்களே, அவர்களை கெட்டவர்களின் கூட்டத்திலிருந்து பிரிக்க வேண்டும்,” என்றார்.
நம் வீடுகளில் ‘சம்ஸ்காரம்’ – பண்பாடு – நடத்தையின் மதிப்பை நம் குழந்தைகளுக்குக் கொடுப்பது நமது பொறுப்பு. நாம் தடுமாறிவிட்டோம், அதன் விளைவு ‘லவ் ஜிஹாத்’ வெற்றி. இரண்டாவதாக, அனைவரையும் (அ) ஒற்றை அடைப்புக்குள் வைக்காதீர்கள்.
கஸ்வா-இ-ஹிந்த் மற்றும் ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளிகளை இழிவுபடுத்தும் ஒரு பிரிவும் முஸ்லிம்களிடையே உள்ளது. அவர்களை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களை தொடர்பில் வைத்திருக்க வேண்டும்.
கணிசமான அடிப்படைவாதிகள் இருந்தாலும், ‘லவ் ஜிஹாத்’ அல்லது இதுபோன்ற பிற நிகழ்வுகள் வெளிப்படும் போதெல்லாம், முழு முஸ்லிம் சமூகத்தையும் ஒரே அடைப்புக்குள் வைக்கிறோம். அது நல்லதல்ல. நாங்கள் இந்துக்கள், நாங்கள் அப்படி நினைக்கவில்லை. முழு சமூகத்தையும் குறை கூறினால் அடிப்படைவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
“‘சம நீதி’ (சமரசக் கொள்கை) அவசியம். நாம் நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, ‘தண்ட் நீதி’ (தண்டனை கொள்கை) அவசியம். நல்லவர்கள், கெட்டவர்களின் கூட்டத்திலிருந்து நாம் பிரிக்கப்பட வேண்டும். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்க வேண்டும். அவர்கள் பிரிக்கப்பட வேண்டும். நாம் அனைவரையும் சமமாக நடத்த முடியாது. வெவ்வேறு மக்களுக்கு சிகிச்சை வித்தியாசமாக இருக்க வேண்டும். நாம் இதைச் செய்ய வேண்டும்… என்றார்.
சிறுபான்மையினருக்கான சமூக நலத் திட்டங்களை ஆர்.எஸ்.எஸ் நடத்துமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த் அவர் “சங்கத்தில் தனிப்பட்ட வகையில் பிராமணருக்கு அனுமதி இல்லை. சங்கத்தில் வேறு எந்த சாதியினருக்கும் அனுமதி இல்லை. முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை… கிறிஸ்தவர்களுக்கு அனுமதி இல்லை. சைவர்களுக்கு அனுமதி இல்லை… ஹிந்துவுக்கு மட்டுமே அனுமதி. வெவ்வேறு பிரிவுகளைக் கொண்ட முஸ்லிம்கள்… கிறிஸ்தவர்கள் சங்கத்திற்கு வரலாம்… உங்கள் சிறப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், நீங்கள் ‘ஷாகா’விற்குள் வரும்போது, நீங்கள் ‘பாரத மாதாவின்’ மகனாக வருகிறீர்கள்… பரந்த இந்து சமூகத்தின் உறுப்பினராக வருகிறீர்கள்” என்றார் அவர.
ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளைத் தடை செய்யக் கோரினார். ஆர்.எஸ்.எஸ்ஸின் பதிவு எண் மற்றும் அவர்களின் நிதி ஆதாரத்தையும் அவர் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ்., தனிநபர்களின் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ்., அமைப்பு 1925ல் நிறுவப்பட்டது. எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அரசு பதிவை கட்டாயமாக்கவில்லை. நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப் பட்டுள்ளோம், மேலும் நாங்கள் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. வருமான வரித் துறையும் நீதிமன்றங்களும் ஆர்எஸ்எஸ்.,ஸை தனிநபர்களின் அமைப்பாகக் குறிப்பிட்டுள்ளன. எங்கள் ‘குரு தக்ஷிணா’வுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் மூன்று முறை தடை செய்யப்பட்டோம். எனவே அரசாங்கங்கள் எங்களை அங்கீகரித்துள்ளன. பதிவு செய்யப்படாததற்கு பல விஷயங்கள் உள்ளன. சனாதன தர்மம்கூட பதிவு செய்யப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ்.,ஸில் காவிக் கொடியே குருவாகக் கருதப்பட்டாலும், இந்திய மூவர்ண கொடி மீது மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறோம்.
நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை. நாங்கள், வாக்கு அரசியல், தற்போதைய அரசியல், தேர்தல் அரசியல் உள்ளிட்டவற்றில் பங்கேற்க மாட்டோம். சமூகத்தை ஒற்றுமைப்படுத்த சங்கம் பாடுபடுகிறது. அரசியல் இயற்கையிலேயே பிரிவினையை ஏற்படுத்தும். இதனால், அரசியலில் இருந்து விலகி இருக்கிறோம்.
நாங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறோம். குறிப்பாக, நாம் ஒரு சக்தியாக இருப்பதால், சரியான கொள்கையை ஆதரிக்க எங்கள் ஆற்றலை பயன்படுத்துவோம். தனிநபரையோ, கட்சியையோ இல்லை. கொள்கையை மட்டும் ஆதரிப்போம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என விரும்பினோம். இதனால், கோயில் கட்டுவதற்கு ஆதரவானவர்களை ஆர்எஸ்எஸ்., உறுப்பினர்கள் ஆதரித்தனர். பாஜக.,தான் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருந்தால் அக்கட்சிக்கு தொண்டர்கள் வாக்களித்து ஆதரவு தெரிவித்து இருப்பார்கள்.
எங்களுக்கு எந்தவொரு கட்சி மீதும் தனிப்பாசம் ஏதும் இல்லை. ஆர்எஸ்எஸ்., கட்சி என ஏதும் இல்லை. எந்தக் கட்சியும் எங்களுடையது அல்ல. அனைத்து கட்சிகளும் பாரதிய கட்சிகள் என்பதால், எங்களுடையது. நாங்கள் ராஷ்ட்ர நீதியை ஆதரிக்கிறோம். ராஜநீதியை அல்ல. மக்கள் என்ன செய்தாலும் அது அவர்களின் உரிமை. ஆனால், நாங்கள் பெருமைப்படும் ராஷ்ட்ர நீதிக்கு ஆதரவாக எங்களது கொள்கையை செலுத்துவோம்… என்று தெளிவுபடுத்தினார்.
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சமீபத்திய குரல் குறித்து பகவத் கூறினார்: “நாங்கள் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. எங்களுக்கு வேறு முக்கியமான வேலைகள் உள்ளன… விமர்சனம் எங்களை மேலும் பிரபலமாக்குகிறது. நாங்கள் இப்போதுதான் கர்நாடகாவில் (அதை) பார்த்திருக்கிறோம். அவர்கள் மேலும் கேள்விகளை எழுப்ப நாங்கள் ஊக்குவிப்போம்.” என்றார்.





